Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை உரிமையா? தேசவிரோதக் கொடுஞ்செயலா?

தேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை உரிமையா? தேசவிரோதக் கொடுஞ்செயலா?

  • PDF

05_2006.jpg

தமிழகமெங்கும் நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சார இயக்கத்தை வீச்சாக நடத்தி வருகின்றன. துண்டுப் பிரசுரம், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டம்கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும், தேர்தல் புறக்கணிப்பு பிரச்சார இயக்கத்தையொட்டி வெளியிடப்பட்ட ""ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!''

 என்று தலைப்பிடப்பட்ட சிறு வெளியீட்டை பல்லாயிரக் கணக்கில் மக்களிடம் பிரச்சாரம் செய்து  விநியோகித்தும், நாடாளுமன்ற  சட்டமன்ற போலி ஜனநாயகத் தேர்தல் நாடகத்தை அம்பலப்படுத்தி வருகின்றன. உழைக்கும் மக்களின் பேராதரவோடு புரட்சிப் பாதையில் இப்பிரச்சார இயக்கம் பீடு நடைபோட்டு முன்னேறி வருகிறது.

 

            ஓசூர், காங்கேயம், நாமக்கல் அருகேயுள்ள காளப்பநாயக்கன்பட்டி, சென்னை, விருத்தாசலம் ஆகிய இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சார பொதுக் கூட்டம்  கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளித்த போலீசு, அதன்பிறகு தொடர்ச்சியாக பென்னாகரம், திருச்சி, விழுப்புரம் அருகே கெடார், கடலூர், நெய்வேலி என அடுத்தடுத்து அனைத்து இடங்களிலும் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுத்து, அரசியல் பிரச்சார உரிமையையும் காலில் போட்டு மிதித்து வருகிறது. ஓட்டுப் போடுவதும், ஓட்டுப் போடாமல் தேர்தலைப் புறக்கணிப்பதும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை. ஆனால், தேர்தலைப் புறக்கணிப்பது சட்டவிரோதம்  தேசவிரோதம் என்று புது விளக்கம் தருகிறது போலீசு. ஓசூரில், ஏப்ரல் 17ஆம் தேதியன்று நடந்த தேர்தல் புறக்கணிப்பு பொதுக் கூட்டம்  கலை நிகழ்ச்சிக்குப் பிறகு, மறுநாள் ஏப்ரல் 18ஆம் தேதியன்று பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த பரசுராமன், சீனு.இரவிச்சந்திரன் ஆகிய இரு முன்னணித் தோழர்கள் அரசைக் கவிழ்க்க சதி செய்ததாகப் பொய்க் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். ""நக்சலைட் ஊடுருவல்'' என்று போலீசு கொடுத்த செய்தியை பத்திரிகைகள் அப்படியே வாந்தி எடுத்தன.

            சென்னையில் தேர்தலைப் புறக்கணித்துப் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரளுமாறு அறைகூவிய சுவரொட்டிகளை ஒட்டிய இரு தோழர்கள், மதுரையில் துண்டுப் பிரசுரம் விநியோகித்து தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம் செய்த  கல்பனா, வீணா ஆகிய இரு பெண் தோழர்கள், வேலூரில் ""ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!'' என்ற சிறு வெளியீட்டை பேருந்துகளில் பிரச்சாரம் செய்து விற்பனை செய்த தோழர் இராவணன்  என அடுத்தடுத்து தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய சட்டவிரோத அடக்குமுறைகள்  அச்சுறுத்தல்களைத் துச்சமாக மதித்து, தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சாரத்தை இப்புரட்சிகர அமைப்புகள் தமக்கே உரிய வீரியத்தோடு தொடர்ந்து நடத்தி வருகின்றன.

 

            தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமை மட்டுமல்ல; இப்போது தேர்தலைப் புறக்கணிக்கும் அடிப்படை ஜனநாயக உரிமைகூட பறிக்கப்பட்டு அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. நடப்பது சட்டபூர்வ ஜனநாயக ஆட்சியல்ல; மறுகாலனியாதிக்க பாசிச ஆட்சி என்பதையே இவை மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.