Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் மனித உரிமைகளை மறுக்கும் உலகமயமாக்கம்

மனித உரிமைகளை மறுக்கும் உலகமயமாக்கம்

  • PDF

05_2006.jpg

அபாயகரமான ஆஸ்பெஸ்டாஸ் கழிவுகள் நிறைந்த பிரெஞ்சு இராணுவக் கப்பல், இந்தியாவில் உடைக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டதை எதிர்த்துப் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் சமீபத்தில் போராடின. இந்தப் பிரச்சினையில் தலையிட்ட உச்சநீதி மன்றம், ""இது குறித்து யாரும் எந்தக் கருத்தும் கூறக் கூடாது'' என உத்தரவு போட்டது. நமது நாட்டில் கருத்துரிமை எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு முத்தாய்ப்பான உதாரணம்.

 

பொது மக்களின் பிரச்சினைகளுக்காகப் பொதுக் கூட்டங்கள் போடுவது; ஊர்வலங்கள், கடையடைப்புப் போராட்டங்கள் நடத்துவது; தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்கள் செய்வது இப்படி இதுநாள்வரை அரசியல் சாசனத்தில் இருந்து வந்த சட்டபூர்வமான ஜனநாயக உரிமைகளை, ஒவ்வொன்றாக நீதிமன் றம் சட்டவிரோதம் என அறிவித்து வருகிறது. இத்தீர்ப்புகள் ஒருபுறமிருக்க, இந்தியக் குற்றவியல் சட்டத் தொகுப்பையே, ""பொடா''விற்கு இணையாகத் திருத்தி எழுதும் முயற்சியில் மைய அரசு ஏற்கெனவே இறங்கிவிட்டது.

 

தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்கத்திற்கு ஏற்றவாறு, சட்டபூர்வ பாசிச ஆட்சி அரங்கேறி வருவதைத்தான், இவை அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன.

 

இப்பாசிச அபாயத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளை, கடந்த பிப்.18 அன்று, ""உலகமயமாக்கச் சூழலில் மனித உரிமைகளின் நிலை'' எனும் கருத்தரங்கை மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத் திறந்தவெளி அரங்கில் நடத்தியது. மனித உரிமைப் போராளியும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளையின் தலைவருமான ஆர்.நல்லகாமன், இக்கருத்தரங்கை தலைமை தாங்கி நடத்தினார்.

 

இக்கருத்தரங்கில், ""உள்நாட்டுச் சட்டங்களைச் செல்லாக்காசாக்கும் பன்னாட்டு மூலதனம்'' எனும் தலைப்பில் உரையாற்றிய பெங்களூரைச் சேர்ந்த வழக்குரைஞர் எஸ்.பாலன், ""பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது இலாப வேட்டைக்கு ஏற்றாற்போல, ஒவ்வொரு துறையிலும் இந்தியச் சட்டங்களை எப்படி மாற்றி அமைக்கின்றன'' என்பதனை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கினார்.

 

மதுரை உயர்நீதி மன்ற முன்னணி வழக்குரைஞர் தி.லஜபதிராய், ""சாதியப் படிநிலைகளும் சட்டங்களும்'' எனும் தலைப்பில் உரையாற்றினார். ""பெருவாரியான இந்திய சட்டங்கள் சாதிய கட்டுமானத்தை வலுப்படுத்துகின்ற வகையிலேயேதான் எழுதப்பட்டுள்ளன'' என விளக்கிப் பேசிய அவர், உச்சநீதி மன்றத்தில் புரையோடிப் போயிருக்கும் மேல்சாதி வெறியையும் அம்பலப்படுத்தினார்.

 

""ஊழல் நீதிமன்றங்களுக்கும் உண்மையான நீதிக்கும் இடையே உள்ள தூரம்'' எனும் தலைப்பில் உரையாற்றிய திராவிடர் கழக மாநிலச் சட்டத்துறை அமைப்பாளர் வழக்குரைஞர் சி.மகேந்திரன், ""காசு உள்ளவனுக்கே நீதி என்பதுதான் நீதிமன்றங்களின் இன்றைய நிலை. நீதிமன்றங்களில் இலஞ்ச ஊழல் தலைவிரித்தாடும் பொழுது, அங்கே நீதிக்கு எங்கே இடம் இருக்கிறது'' என வினவினார்.

 

நெல்லை வழக்குரைஞர் சங்கத் தலைவர் இரா.சி.தங்கசாமி, ""மனித உரிமை மீறல்களும் அதற்கான தீர்வுகளும்'' எனும் தலைப்பில் பேசியபொழுது, ""மனித உரிமைகளை மீட்பதற்கான தீர்வு நீதிமன்றங்களிலோ, அதிகார மட்டங்களிலோ இல்லை. மக்கள் போராட்டங்களே அதற்கான தீர்வு'' எனக் குறிப்பிட்டார்.

 

""மனித உரிமைகளை மறுக்கும் அதிகார வர்க்கத்தை''ப் பற்றி உரையாற்றிய தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகரும், பிரபல வழக்குரைஞருமான பவானி பா.மோகன், ""ஒரு தவறும் செய்யாத சாமானிய மக்கள் பலர் சிறை, சித்திரவதை போன்ற கொடுமைகளை அனுபவித்து வருவதற்கு அதிகாரிகளே காரணம்; உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களைச் சிறையில் தள்ளி வேடிக்கை பார்க்கிறது அதிகார வர்க்கம். இந்த நிலை மாற வேண்டுமானால் மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற அமைப்புகள் வளர வேண்டும்'' என எடுத்துக் கூறினார்.

 

மக்கள் அமைப்பு ரீதியாகத் திரண்டு போராடத் தொடங்கினால், பாசிசம் தவிடுபொடியாகி விடும் என்பதை உணர்த்துவதாக இக்கருத்தரங்கம் அமைந்தது.

மனித உரிமை பாதுகாப்பு மையம்,

 

மதுரை மாவட்டக் கிளை.