Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் நக்சலைட்டு தேடுதல் வேட்டை : அரசே உருவாக்கிய உள்நாட்டுப் போர்!

நக்சலைட்டு தேடுதல் வேட்டை : அரசே உருவாக்கிய உள்நாட்டுப் போர்!

  • PDF

06_2006.jpg

ஆளரவமற்ற அடர்ந்த காடு. இருபுறமும் புதர்கள் மண்டிய ஒற்றையடிப் பாதையில் அம்மண்ணின் மைந்தரான மர்விந்தாவும் அவரது குடும்பமும் தமது கிராமத்தை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தனர். தமது வீட்டையும் தோட்டத்தையும் பார்த்து விட்டு மாலைக்குள் திரும்பிவிட வேண்டுமென்ற அவசரத்தில் அவர்கள் வேகமாக நடந்தனர். இருளிபலாம் கிராமத்தை அடைந்த போது துக்கம் அவர்களது தொண்டையை அடைத்தது. அங்கே எரிந்து சாம்பலாகிக் கிடக்கும் தமது குடிசையைக் கண்டதும் ""ஓ''வெனக் கதறி அழுதனர்.

 பின்னர் ஒருவாறு தேற்றிக் கொண்டு, தமது குடிசையை ஒட்டியுள்ள தோட்டத்தில் முளைவிட்டுள்ள கிழங்குகள்  பயிர்களுக்குத் தண்ணீர் ஊற்றி, வேலிகளைச் சரிசெய்து விட்டு கனத்த இதயத்துடன் நிவாரண முகாமுக்குத் திரும்பினார்.

 

            நேற்றுவரை அவர்கள் சட்டிஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் வட்டாரத்திலுள்ள இருளிபலாம் கிராமத்தில் வாழ்ந்த பழங்குடியின மக்கள். இன்று, அவர்கள் அங்கு வாழ முடியாத அகதிகள். இப்போது அவர்கள் இக்காட்டுப் பகுதி கிராமத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள ஷெல்னார் எனும் சந்தை நகரிலுள்ள அகதி முகாமில் அரசாங்கத்தால் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அவர்கள் தங்கள் கிராமத்துக்குச் சென்று நிலத்தைப் பார்த்துவிட்டு வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 

            ""கடந்த ஆண்டு அக்டோபரில் அந்த அட்டூழியம் நடந்தது. எங்கள் கிராமத்தை போலீசாரும் குண்டர்களும் முற்றுகையிட்டு துப்பாக்கி முனையில் எங்களைக் கட்டாயமாக வெளியேற்றினர். நான் வெளியேற முடியாது என்று மறுத்து வாதாடினேன். போலீசார் என்னை மிருகத்தனமாக அடித்தனர். என் கைகளைப் பின்புறமாகக் கட்டித் தலைகீழாக மரத்தில் தொங்கவிட்டு அடித்தனர். போலீசாருடன் வந்த ""சல்வாஜுடும்'' என்ற பெயரிலான குண்டர்கள் எங்களது குடிசைகளைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். கிராமத்தை விட்டு வெளியேறாவிட்டால், உங்களை நக்சலைட்டுகள் என்று கூறிச் சுட்டுக் கொன்று விடுவோம் என்று  எச்சரித்து எங்களைச் சித்திரவதை செய்தார்கள். வேறு வழியின்றி நாங்கள் கிராமத்தைவிட்டு வெளியேறி அகதிமுகாமில் வதைபடுகிறோம்'' என்று விம்முகிறார் மர்விந்தா.

 

            மர்விந்தாவைப் போலவே பல்லாயிரக்கணக்கான சட்டிஸ்கர் மாநில பழங்குடியின மக்கள் தாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த காட்டுப் பகுதிகளை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்டு அரசாங்க அகதி முகாம்களில் அல்லற்படுகின்றனர். இவ்வாறு காடுகளை விட்டு வெளியேற மறுத்த குற்றத்திற்காக சல்வாஜுடும் குண்டர்களால் ஏறத்தாழ 250 பழங்குடியின மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். சல்வாஜுடும் இயக்கத்தில் சேர மறுத்ததற்காக 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

 

            சல்வாஜுடும் என்பது என்ன? எதற்காக பழங்குடியின மக்களை அவர்கள் வதைக்கிறார்கள்? அரசாங்கம் எதற்காக பழங்குடியின மக்களைக் காடுகளைவிட்டு வெளியேற்றி நிவாரண முகாம்களில் அடைத்து வைக்கிறது? மறுகாலனியாதிக்கம்  அரசு பயங்கரவாதம், இவற்றுக்கு எதிரான புரட்சிகர இயக்கங்களின் போராட்டங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய கேள்விகளே இவை.

 

            சட்டிஸ்கர் மாநிலத்தின் தெற்கே ஆந்திராவை ஒட்டியுள்ள பஸ்தார், கோண்டா வட்டாரங்கள் வனவளமும் தாதுவளமும் நிறைந்த பூமியாகும். இங்கு ""டெண்டூ'' எனப்படும் பீடி இலை பெருமளவில் காட்டுப்பகுதியில் விளைவிக்கப்படுகிறது. இம்மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்கள் அற்பக் கூலிக்கு பீடி இலைகளைப் பறித்துக் கொடுத்துவிட்டு வறுமையில் உழல்கின்றனர். வனத்துறை அதிகாரிகளின் ஊழல்  ஒடுக்குமுறை, பீடி இலைகளைக் கொள்முதல் செய்யும் வர்த்தக ஒப்பந்தக்காரர்களின் அற்பக் கூலி  அடிமைத்தனங்களுக்கு எதிராகவும் இப்பழங்குடியின மக்களின் வாழ்வுரிமைக்காகவும் நீண்ட நெடுங்காலமாக நக்சல்பாரிப் புரட்சியாளர்களான மாவோயிஸ்டுகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

 

            மேலும், இந்த வட்டாரம் இரும்புத்தாது வளமிக்கதாகும். இப்பகுதியின் இரும்புத்தாதுவில் அதிகபட்சமாக  அதாவது 68% அளவுக்கு இரும்புச்சத்து உள்ளது. அருகிலேயே ஷாப்ரி என்னும் வற்றாத நதி பாய்கிறது. எனவே, இப்பகுதியின் மண்ணின் மைந்தர்களை விரட்டியடித்துவிட்டு இங்கு எஃகு ஆலை நிறுவிச் சூறையாட எஸ்ஸார் ஸ்டீல், டாடா, மித்தல் முதலான தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் இறங்கியுள்ளன. சட்டிஸ்கர் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இம்மறுகாலனியாதிக்கச் சூறையாடலுக்கு எதிராக நக்சல்பாரி புரட்சியாளர்கள் விழிப்புணர்வூட்டி பழங்குடியின மக்களை அணிதிரட்டி வருகிறார்கள்.

 

            இதன் காரணமாகவே, தரகுப் பெருமுதலாளிகளும் காடுகளைச் சூறையாடும் நிலப்பிரபுக்களும் பீடி இலை ஒப்பந்தக்காரர்களும் பழங்குடியின மக்களையும் அவர்களது வாழ்வுரிமைக்காகப் போராடிவரும் நக்சல்பாரிகளையும் ஒழித்துக் கட்டுவதில் ஓரணியில் நிற்கிறார்கள். அவர்களது நலன் காக்கும் மைய அரசும் மாநில அரசும் பின்தங்கியுள்ள சட்டிஸ்கர் மாநிலத்தின் தொழில்வளர்ச்சிக்கு நக்சல்பாரிகள் தடையாக இருப்பதாகக் குற்றம் சாட்டி அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன.

 

            இருப்பினும், அடக்குமுறைகளைத் துச்சமாக மதித்து நக்சல்பாரி இயக்கம் விரிவடைந்து முன்னேறுகிறது. புரட்சிகர சித்தாந்தத்தைக் கொண்டிருப்பதால் நக்சல்பாரி இயக்கத்தினரை விலைபேசவோ பிளவுபடுத்தவோ ஆளுங்கும்பலால் முடியவில்லை. எனவேதான், பழங்குடியின மக்களைக் கொண்டே பழங்குடியின மக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் நக்சல்பாரிகளை வீழ்த்துவதற்கான புதிய பயங்கரவாத உத்தியுடன் ஆட்சியாளர்களும் பெருமுதலாளிகளும் கிளம்பியிருக்கிறார்கள். அவர்களது சதியில் உருவான கள்ளக் குழந்தைதான் ""சல்வாஜுடும்'' என்ற அமைப்பு. கோண்ட் வட்டார மொழியில் இதற்கு ""அமைதி இயக்கம்'' என்று பொருள்.

 

            இந்த இயக்கத்தின் நிறுவனர், முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான காங்கிரசு பிரமுகர் மகேந்திர கர்மா ஆவார். சட்டிஸ்கர் மாநில பா.ஜ.க. முதல்வரான ரமண் சிங், உள்துறை அமைச்சரான ராம் விசார் நேதம் ஆகியோர் மகேந்திர கர்மாவுடன் இணைந்து இந்த இயக்கத்தை வழிநடத்துகின்றனர். ""நக்சல்பாரிகளின் வன்முறைக்கு எதிரான அமைதி இயக்கம்'' என்று கூறிக் கொள்ளும் இந்த அமைப்பு, உண்மையில் ஒரு பயங்கரவாத அமைப்பு; மத்தியிலுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் மாநிலத்தின் பா.ஜ.க. அரசும் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள அரசு பயங்கரவாத அமைப்பு. போலீசுஇராணுவத்தை வைத்து பழங்குடியின மக்கள் மீது அடக்குமுறையை ஏவி காடுகளை விட்டு அவர்களைக் கட்டாயமாக வெளியேற்றினால், அரசாங்கம் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் எதிர் கொள்ள நேரிடும்; அம்பலப்பட்டு தனிமைப்பட நேரிடும். எனவே, பழங்குடியின மக்களைக் கொண்டே பழங்குடியின மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, பீதியூட்டி கட்டாயமாக வெளியேற்றி, தமது மறுகாலனியாதிக்கச் சேவையைத் தொடர காங்கிரசும் பா.ஜ.க.வும் கூட்டணி சேர்ந்து உருவாக்கியுள்ள பயங்கரவாத கைக்கூலிப் படைதான் ""சவ்லாஜுடும்''.

 

            பஸ்தார் பிராந்தியத்தில் நக்சல்பாரிகளின் வன்முறையை எதிர்ப்பது என்ற பெயரில் காங்கிரசு தலைவர் மகேந்திரகர்மாவினால் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு டாடா, மித்தல் முதலான தரகுப் பெருமுதலாளிகளும் பீடி இலை கொள்முதல் ஒப்பந்தக்காரர்களும் கோடிகோடியாய் நிதியளிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் மகளிர்சுய உதவிக் குழுக்களைப் போல சல்வாஜுடும் குழுக்களைத் தத்தெடுத்து ஊட்டி வளர்க்கிறது. போலீசும் துணை இராணுவப் படைகளும் ஆயுதப் பயிற்சியளித்து துப்பாக்கிகளை விநியோகிக்கின்றன. சல்வாஜுடும் குழுவில் சேருவோருக்கு மாதம் ரூ. 1500 உதவித் தொகையும் 10 கிலோ இலவச அரிசியும் அரசு வழங்குகிறது. சமூக விரோதிகளும் வேலையற்ற பழங்குடியின இளைஞர்களும் சல்வாஜுடும் குழுக்களாக அணிதிரட்டப்படுகின்றனர். நக்சல்பாரி ஆதரவு கிராமங்கள் எவையெவை, நக்சல்பாரி புரட்சியாளர்கள் யார் யார் என்று போலீசுக்கு ஆள்காட்டியாகச் செயல்படுவதும், முன்னிருந்து தாக்குதல் நடத்துவதும் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலை. அப்பாவி பழங்குடியின கிராமங்களில் அடையாளம் தெரியாமல் தாக்குதல் நடத்திவிட்டு நக்சல்பாரிகள் செய்ததாக பழிபோட்டு ஆத்திரமூட்டுவது, அதைத் தொடர்ந்து சல்வாஜுடும் குழுக்களில் அக்கிராமத்தவரை அணிதிரட்டுவது, பின்னர் நக்சல்பாரி ஆதரவு கிராமங்களின் மீது தாக்குதல் நடத்துவது என்பதாக உத்திகளை வகுத்துக் கொடுத்து மாநில போலீசும் நாகா இராணுவப்படையும் இக்குழுக்களை இயக்கி வருகின்றன.

 

            கடந்த ஏப்ரல் 13ஆம் தேதியன்று நக்சல்பாரி புரட்சிகர போராட்டங்கள் தொடரும் மாநிலங்களின் முதலமைச்சர்களது உயர்மட்டக் கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்தது. அக்கூட்டத்திலும், அதற்குமுன் மைய அரசின் உள்துறைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்திலும் சல்வாஜுடும் இயக்கத்தை அரசு அங்கீகரித்து ஆதரித்துள்ளது. தன்னார்வ  சுயஉதவிக் குழுக்களைப் போல இத்தகைய நக்சல்பாரி எதிர்ப்பு உள்ளூர் தற்காப்புக் குழுக்களை அவசியமான மாநிலங்களில் கட்டி வளர்த்து அவற்றுக்கு ஆயுதப் பயிற்சியும் பாதுகாப்பும் வழங்க வேண்டுமென்று இக்கூட்டங்களில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ""நாடு இதுவரை கண்டிராத வகையில், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக நக்சல்பாரி இயக்கம் வளர்ந்துவிட்டது. நாடு முழுவதும் 160க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இது அரசுக்கு மிகப் பெரும் சவாலாக மாறியுள்ளது'' என்று பீதியுடன் எச்சரிக்கும் பிரதமர் மன்மோகன்சிங், இராணுவ  துணை இராணுவ  போலீசுப் படைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும், நக்சல்பாரிகளின் செல்வாக்குள்ள பகுதிகளில் வளர்ச்சித்திட்டப் பணிகளை முடுக்கி விடவும் ஆவன செய்வதாக அறிவித்துள்ளார். பஞ்சாபின் முன்னாள் அரசு பயங்கரவாதியான கே.பி.எஸ்.கில், நக்சல்பாரி ஒழிப்புப் போரில் ஈடுபட்டுள்ள போலீசு அதிகாரிகளுக்கு வழிகாட்ட ஏற்பாடு செய்யப்பட்டு, அவர் சட்டிஸ்கருக்கு ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருக்கிறார்.

 

            ஒருபுறம், போலீசுதுணை இராணுவப்படைகள் மூலம் தாக்குதல்; மறுபுறம், சல்வாஜுடும் எனும் பழங்குடியின பயங்கரவாத அமைப்பின் மூலம் தாக்குதல் என நக்சல்பாரிகளுக்கும் பழங்குடியின மக்களுக்கும் எதிராக சட்டிஸ்கரில் ஒரு உள்நாட்டுப் போரை ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். கடந்த 2005ஆம் ஆண்டில் சல்வாஜுடும் என்ற பயங்கரவாத இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை ஏறத்தாழ 400 பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கோண்டா மாவட்டத்தில் மட்டும் 216 பேர் பலியாகியுள்ளனர். 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டுள்ளன. பல பகுதிகளில் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சிறுவர்களும் முதியவர்களும் கூட கோரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். காடுகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு ஏறத்தாழ 30,000 பழங்குடியின மக்கள் அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கோண்டா மாவட்டம் மட்டுமின்றி, தோர்னபால், தந்தேவாடா, பிஜாப்பூர், ஜெக்தல்பூர், கன்கெர் முதலான மாவட்டங்களில் இத்தகைய முகாம்கள் பெருகியுள்ளன.

 

            சல்வாஜுடும் அமைப்பைக் கொண்டு அரசு நடத்திவரும் இப்பயங்கரவாத அட்டூழியங்களை மூடிமறைத்து விட்டு, ""நக்சலைட்டுகளுக்கு எதிராக பழங்குடியின மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள்; மக்கள் யுத்தம் பரவுகிறது'' என்று ஆளும் கும்பலும் தேசிய பத்திரிகைகளும் வெறித்தனமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. சல்வாஜுடும் குண்டர்களின் பயிற்சி முகாம்கள் மீது நக்சல்பாரிகள் தாக்குதல் நடத்தினாலோ, அல்லது போலீசுடனான "மோதலில்' அப்பாவி பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டாலோ, அதைக் காட்டி பழங்குடியினரை ஆத்திரமூட்டி, அவர்களை சல்வாஜுடும் அமைப்பில் சேர்த்துக் கொண்டு மீண்டும் தாக்குதல் நடத்துவது என்பதாக அரசு பயங்கரவாதிகள் உள்நாட்டுப் போரைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

 

            இது ஏதோ நக்சல்பாரி புரட்சிகர இயக்கத்துக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை மட்டுமல்ல; இது மறுகாலனியாதிக்க ஆக்கிரமிப்புப் போர். மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு, காடுகளையும் தாதுவளங்களையும் தரகுப் பெருமுதலாளிகளும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் கைப்பற்றிச் சூறையாடுவதற்காக நடத்தும் போர். அன்று, வியட்நாமில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் மேற்கொண்ட அதே உத்தியுடன்தான் இந்தப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதாவது, மக்கள் எனும் கடலில் நீந்தும் மீன்களாகிய கம்யூனிசப் புரட்சியாளர்களைப் பிடிக்க, நீரை வெளியேற்றுவது என்ற உத்தியுடன் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் வியட்நாம் கிராமப்புறங்களில் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தி, மக்களைக் கட்டாயமாக வெளியேற்றி, கம்யூனிஸ்டுகளையும் நாட்டுப் பற்றாளர்களையும் வேட்டையாட முற்பட்டனர். ஆனால், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களின் சூழ்ச்சிகள்  சதிகளை முறியடித்து நாட்டு விடுதலைப் போரில் வியட்நாம் வெற்றி பெற்றது. பெருந்தோல்வியில் முடிந்த அந்த அமெரிக்க உத்தியுடன் கிளம்பியுள்ள இந்திய அரசு பயங்கரவாதிகள், இப்போது நக்சல்பாரிகளைப் பிடிக்க பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கட்டாயமாக காடுகளிலிருந்து வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 

            ஆனால், அரசு பயங்கரவாதிகளின் சூழ்ச்சிகளும், சதிகளும் மெதுவாகக் கசியத் தொடங்கி மனித உரிமை  ஜனநாயக உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, இப்பயங்கரவாத உள்நாட்டுப் போரை உடனடியாக நிறுத்துமாறு எச்சரித்துள்ளன. புலனாய்வு பத்திரிகைகள் பஸ்தார் பிராந்தியத்துக்கு நேரில் சென்று உண்மை நிலைமையை விளக்கி அரசு பயங்கரவாதிகளின் கோரமு கத்தை அம்பலப்படுத்தி வருகின்றன. பஸ்தார் வட்டார வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான மனிஷ் கன்ஜாம் என்பவர், ""பழங்குடியினர் நக்சல்பாரிகளுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறுவது முழுப் பொய். நக்சல்பாரிகளின் வழிமுறைகளில் எமக்கு உடன்பாடில்லை என்பதற்காக, சல்வாஜுடும் அமைப்பின் அட்டூழியங்களை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க முடியாது'' என்கிறார். இதுதவிர, பல்வேறு கல்வியாளர்களும் சமூகவியலாளர்களும் அரசின் பயங்கரவாத உள்நாட்டுப் போரை உடனே நிறுத்தக்கோரி பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

            அன்று, இந்திய உழைக்கும் மக்களை சாதி, மத, இன ரீதியாகப் பிளவுபடுத்தி மோதவிட்டு பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் காலனியாதிக்கத்தை நிறுவியது, வெள்ளை ஏகாதிபத்தியம். இன்று, பழங்குடியின மக்களைக் கொண்டே பழங்குடியின மக்கள் மீது உள்நாட்டுப் போரைக் கட்டவிழ்த்துவிட்டு இயற்கை வளங்களைச் சூறையாடக் கிளம்பியுள்ளது, மறுகாலனியாதிக்கம். இப்பயங்கரவாத சூழ்ச்சிகள்  சதிகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதும், மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போரை முன்னெடுத்துச் செல்வதும் புரட்சிகர  ஜனநாயக சக்திகளின் அவசர  அவசியக் கடமையாகியுள்ளது.

 

மு மனோகரன்