Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் குற்றக் கும்பல்களின் பிடியில் திணறும் இந்தியா

குற்றக் கும்பல்களின் பிடியில் திணறும் இந்தியா

  • PDF

9_2006.jpg

"பொதுவில் சொன்னால், குற்றவாளிகளில் பலர் சூழ்நிலைக்குப் பலியானவர்கள்தாம்'' இப்படிச் சொன்னவர் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா. சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலையான இரண்டு பெண்களுக்கான மறுவாழ்வு ஆணைகளை வழங்கிய அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

அவசரநிலை ஆட்சியில் பர்னாலா கைதாகி ஜலந்தர் சிறையில் அடைக்கப்பட்டபோது, உணவு பரிமாறிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டாராம். வெறும் 20 காசுக்கான தகராறில் வாய்ச்சண்டை முற்றியதால் இந்தச் சிறுவன் ஒருவனைக் கத்தியால் குத்திவிட, அவன் செத்துப் போனான். அதற்காகத் தண்டிக்கப்பட்ட இந்தச் சிறுவன் சிறையில் கிடந்தான். இவனை எடுத்துக்காட்டாகக் காட்டித்தான், பெரும்பாலான குற்றவாளிகள் சூழ்நிலைமைகளுக்குப் பலியானவர்கள்தாம் என்று பர்னாலா கூறியிருக்கிறார்.

 

பர்னாலா ஒரு பழுத்த அரசியல்வாதி. அதாவது ""பழம் தின்று கொட்டை போட்டவர்'' என்று சொல்வார்களே அந்த வகையைச் சேர்ந்தவர். அதனால்தான் உண்மைக்கு மாறாகப் பேசியிருக்கிறார். ""பெரும்பாலான கிரிமினல் குற்றங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டே நிகழ்த்தப்படுகின்றன. அப்படிப்பட்ட குற்றவாளிகள் பெரும்பாலும் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்'' என்று சொல்லி இருந்தால்தான் சரியாக இருக்கும்.

 

""சந்தர்ப்ப சூழ்நிலைகளால் குற்றங்கள் புரிபவர்கள்தான் பெரும்பாலும் வழக்குமன்றங்களில் நிறுத்தப்படுகிறார்கள்; இப்படிப்பட்டவர்கள்தான் பெரும்பாலும் தண்டிக்கப்படுகிறார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு கிரிமினல் குற்றங்கள் புரிபவர்கள் வழக்குமன்றங்களுக்குப் பெரும்பாலும் கொண்டு வரப்படுவதில்லை. தவறிப்போய் கொண்டு வரப்படுபவர்களும் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை'' என்று சொல்லியிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும்.

 

""கிரிமினல் குற்றங்களையே தொழிலாகக் கொண்டவர்கள் செய்யும் குற்றங்கள்தாம் மிகமிக அதிகமாக இருக்கின்றன. அவர்களும் அமைப்புரீதியில் ஒருங்கிணைந்த குற்றக் கும்பல்களாக உள்ளனர். சட்டத்துறையும், காவல்துறையும், நீதித்துறையும் அதற்குப் பாதுகாவலாக செயல்படுகின்றன'' என்று சொல்லியிருந்தால் துல்லியமாக இருந்திருக்கும்.


இப்படிக் கருதுவதற்கு மிகச் சிறந்த சமீபத்திய எடுத்துக்காட்டுகள்:

 

1. தற்போது மையப் புலனாய்வுக் கழகத்தின் விசாரணையில் இருக்கும் போலி முதல் தகவல் அறிக்கை மற்றும் காப்பீட்டு நிறுவனத்தில் நடந்த மோசடிகள் குறித்த வழக்கு.


2. சபரிமலை தலைமைத் தந்திரி கண்டரரு மோகனருவைக் கடத்தி விபச்சாரியுடன் நிர்வாணப் புகைப்படம் பிடித்து, மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகக் கூறிப் போடப்பட்டுள்ள சோபா ஜான் கும்பல் மீதான வழக்கு.


3. 3000 கோடி ரூபாய் அளவுக்கு போலி முத்திரைத்தாள் அச்சடித்து நாடு முழுவதும் விற்றதற்காகப் போடப்பட்டுள்ள தெல்கி கும்பல் மீதான வழக்கு.

 

இம்மூன்று வழக்குகளிலும், தலா நூற்றுக்கணக்கானவர்கள் நன்கு திட்டமிட்டு, பல ஆண்டுகளாக கிரிமினல் குற்றங்கள் புரிந்துள்ளனர். அரசியல்வாதிகள், உயர் அரசுப் பதவிகளில் இருப்பவர்கள், போலீசார்கள் ஆகியோர் கிரிமினல் குற்றக் கும்பல்களோடு சேர்ந்து குற்றங்கள் புரிந்துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் பிடித்துத் தண்டிப்பதற்குப் பதில் கண்துடைப்பு வேலையாக ஒரு சிலர்மீது மட்டும் வழக்குகள் தொடுத்துவிட்டு, பல முக்கியப் புள்ளிகள் தப்பித்துப் போக நீதித்துறையே உடந்தையாக செயல்பட்டு வருகிறது.

 

போலி முதல் தகவல் அறிக்கைகளும் காப்பீட்டு (இன்சூரன்சு) நிறுவனத்தில்
நடந்த கொள்ளையும்

கடந்த சட்டமன்றத் தேர்தல்களுக்கு சில வாரங்களுக்கு முன்பு, அன்றைய ஆட்சியை அம்பலப்படுத்தும் முகமாக சில செய்திகளை கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியும், ஏடுகளும் வெளியிட்டன. தமிழக போலீசு நிலையங்களில் போலி முதல் தகவல் அறிக்கைப் படிவங்கள் அச்சிட்டு மோசடிகள் நடப்பதாக வந்த செய்தி அவற்றில் ஒன்று. இந்தச் செய்தி வெளியான உடனேயே தமிழகப் போலீசு நிலையங்களில் எல்லாம் கட்டுக்கட்டாக முதல் தகவல் அறிக்கை (மு.த.அ.) படிவங்கள் கொளுத்தப்பட்டன. அந்தச் செய்தியும் புகைப்படங்களுடன் வெளிவந்தன. சேலத்தில் ஒரு அச்சக உரிமையாளர் கைது செய்யப்பட்டார். போலி மு.த.அ. படிவங்கள் அச்சிட்டதாக அவர் மீது வழக்கும் போடப்பட்டது.


இதையடுத்து, இந்தப் போலி மு.த.அ. படிவங்கள் பயன்படுத்தியதாக பல போலீசு நிலையங்களில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக செய்தியும் வந்தது; ஆனால், ஒரு போலீசுக்காரன் கூட கைது செய்யப்படவுமில்லை, வழக்கும் போடப்படவில்லை. பழைய ஆவணங்களை எரிப்பது வழக்கந்தான் என்றும், அரசு வழங்கும் மு.த.அ. படிவங்கள் போதியனவாக இல்லாததால் அந்தந்த போலீசு நிலையங்களிலேயே அச்சிட்டுக் கொள்ளும்படி மேலிடத்திலிருந்து வாய்வழி கட்டளை வந்ததாகவும் கிசுகிசு ஏடுகளில் செய்திகளைக் கசியவிட்டது, போலீசுத் துறை.


""நம்பகமான செய்திகளை மட்டுமே வெளியிடுவது'' என்ற மூடுதிரையின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் ஜெயலலிதா ஆதரவு பார்ப்பன ஏடுகளான தி இந்து, தினமணி, எக்ஸ்பிரஸ் போன்றவை மட்டுமல்ல; வதந்திகளையே எழுதிக் குவிக்கும் தினமலர்(ம்) கூட இந்த போலி மு.த.அ. விவகாரம் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்தது. இறுதியில், ஒரு ஓய்வு பெற்ற போலீசுக்காரரே உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்த பிறகு, ஓரிரு அங்குலச் செய்தியாக அந்தப் பத்திரிகைகள் வெளியிட்டன.

 

ஆட்சி மாறிய பிறகு, யுனைடெட் இந்தியா இன்சூரன்சு லிமிடெட் என்ற அரசுடைமையாக்கப்பட்ட காப்பீட்டுக் கழகம், இந்தப் போலி மு.த.அ.களைப் பயன்படுத்தி 1061 வழக்குகள் போட்டு 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பதாக ஒரு வழக்குப் போட்டது. தமிழ்நாடு முழுவதும் பல போலீசு நிலையங்களின் போலீசுக்காரர்கள், அதிகாரிகள், அரசு மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவர்கள், காப்பீட்டுக் கழக அதிகாரிகள், வழக்கறிஞர்கள் இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். சாதாரண விபத்துகளில்கூட வாகனங்களும் ஆட்களும் பாதிக்கப்பட்டதாகவும், இயற்கையாக இறந்தவர்கள் கூட விபத்தில் மரணமடைந்தவர்களாகக் காட்டியும் பொய்யான சான்றிதழ்கள், சாட்சியங்களைப் புனைந்து ஒவ்வொரு வழக்கிலும் இலட்சக்கணக்கில் அரசுடைமைக் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து கொள்ளையிட்டுள்ளனர்.

 

இந்த வழக்குகளில் மாநிலப் போலீசே குற்றமிழைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதால், சி.பி.ஐ. (மத்திய புலனாய்வு நிறுவனம்) விசாரணை கோரி, அவ்வாறே தீர்ப்பும் கூறப்பட்டது. சிவகாசி ஜெயலட்சுமி வழக்கில் நடந்ததைப் போல, சி.பி.ஐ. விசாரணை தொடங்கிய பிறகு, குற்றவாளிகளைத் தப்புவிக்கும் படலம் தொடங்கிவிட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்த வழக்குகளை விசாரிப்பதற்குத் தங்களிடம் போதிய அதிகாரிகள் ஆட்பலம் கிடையாது என்று வழக்கு மன்றத்திடம் எடுத்தவுடன் கைவிரித்தது சி.பி.ஐ. வழக்குமன்றமும் அதை ஏற்றுக் கொண்டு எல்லா வழக்குகளையும் விசாரிக்கத் தேவையில்லை, முக்கியமான பதினோரு வழக்குகளை விசாரித்தால் போதும் என்று தாராள மனதுடன் ஆணை பிறப்பித்து விட்டது.

 

மீதி 1050 வழக்குகளின் கதி என்ன? ""நீதி தேவனுக்கே வெளிச்சம்!'' இதிலிருந்து தெரிவது என்ன? ஒன்றிண்டு குற்றங்கள் செய்தால்தான் தண்டிக்க முடியும். ஏராளமான அளவுக்கு குற்றங்கள் செய்தால் விசாரிக்கவும் முடியாது, தண்டிக்கவும் முடியாது. இருநூறு கோடி ரூபாய்க்கு மேல் மோசடிக்கு பலியான காப்பீட்டு நிறுவனம், நட்டஈடு கோறும் வழக்குகள் போலியானவை; அவற்றைத் தொடுத்தவர்கள் தாமாகவே விலகிக் கொண்டால் மேல் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று அறிவித்தது. வெளியே தெரிந்துள்ள வழக்குகளே ஆயிரத்தைத் தாண்டி உள்ளன. இன்னும் தெரியாத குற்றங்கள் எவ்வளவோ! வெளிச்சத்துக்கு வந்த வழக்குகளை விசாரிப்பது, தண்டிப்பது என்றாலே சில ஆயிரம் பேரையாவது சிறையிலடைக்க வேண்டும். ஒரு வகை வழக்குகளிலேயே இந்த நிலைமை என்றால், எல்லா வகை குற்றங்களையும், வழக்குகளையும் விசாரிப்பது, தண்டிப்பது என்றால் ஊருக்கு ஒரு பெரிய சிறைச்சாலை வேண்டும்; அதிலும் குற்றங்கள், இலஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகள் நடக்கும். இப்படியே போனால் குற்றங்களைத் தடுப்பதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் பொறுப்பேற்றுள்ளவர்களே குற்றவாளிகளாக இருப்பது தெரிந்து விடாதா? அதைவிடச் சிறந்த, எளிய வழிவிசாரணையும் நடப்பதாகவும் தண்டனை வழங்கப்படுவதாகவும், நீதி நிலைநாட்டப்படுவதாகவும் ஒரு கண்துடைப்பு நாடகமாடுவது தானே! அதுதான் நடக்கிறது.

 

சபரிமலை தந்திரிகளும் ஆளும் போலி கம்யூனிஸ்டுகளின் தந்திரங்களும்

சபரிமலை ஐயப்பன் கோவில் வசூலைப் பெருக்குவதற்கு கம்பி வழித்தடம் உட்பட பல புதிய திட்டங்களை வகுத்து அமலாக்குவதற்கு, அய்யப்பனின் ஒப்புதலைப் பெறுவதற்காக ""தெய்வவாக்கு'' பெறுவது என்று போலி கம்யூனிஸ்டுகளின் அரசும் திருவிதாங்கூர் தேவசம் வாரியமும் முடிவு செய்தன. ஜெயலலிதாசசிகலா கும்பலின் அரசவை சோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் கடந்த ஜூனில் தெய்வவாக்கு (தேவ பிரசன்னம் எனப்படும் சோதிடம்) பார்த்தார். அதில் (தனது சன்னிதானத்தில் இளம்பெண்கள் நுழைந்து விட்டதால்) அய்யப்பன் கோபத்தில் இருப்பதாகவும் அதற்குக் கோவில் தலைமைப் பூசாரிகள் பரிகார பூசைகள் நடத்த வேண்டும் என்றும், (தந்திரிகள்தாம் இதற்குக் காரணம் என்றும்) பணிக்கர் கூறினார். கன்னட நடிகை ஜெயமாலாவும் இந்தி நடிகை மயூரியும் தாம் அய்யப்பன் கருவறைக்குள் நுழைந்து வணங்கியிருப்பதாக ஒப்புதல் அளித்தனர்.

 

அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததால் அதன் புனிதம் கெட்டுத் தீட்டுப்பட்டு விட்டதாக பக்தர்கள் கொதித்துப் போவார்கள் என்று போலி கம்யூனிஸ்டு ஆட்சியாளர்களுக்கு அக்கறை பொத்துக் கொண்டு வந்துவிட்டது. போலீசை அனுப்பி புலனாய்வு செய்தது. விசாரணைக்கு நடிகை ஜெயமாலா மறுத்துவிடவே, பரிகார பூசை நடத்தி விவகாரத்தை அமுக்கிவிட எண்ணியது. அய்யப்பன்கோவில் தந்தரிகள்தாம் நடிகைகளை உள்ளே விட்டு முறைகேடுகள் செய்துவிட்டதாக ஒப்பு கொண்டதாகிவிடும் என்பதால், அவர்கள் பரிகார பூசைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் அய்யப்பன் கோவில் தலைமை தந்திரி, கண்டரரு மோகனரரு ஒரு புதிய ""பூத''த்தைக் கிளப்பி விட்டார். சொந்த வேலையாக எர்ணாகுளம் சென்ற தன்னை யாரோ சிலர் கடத்தி, ஒரு பெண்ணுடன் நிர்வாணப் புகைப்படமெடுத்து, ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் தன்னிடமிருந்து நகைகளையும் ரொக்கப் பணத்தையும் பிடுங்கிக் கொண்டதாகவும் போலீசில் புகார் கூறினார். போலீசு விசாரணையில் வேறுபல உண்மைகள் வெளியே வந்தன.

 

எர்ணாகுளத்தில் உள்ள ஒரு விபச்சாரத் தரகுப் பெண் வீட்டுக்கு வழக்கம்போல விபச்சாரம் செய்யத் தந்திரி போனபோதுதான் அப்படி நடந்துள்ளது. சோபா ஜான் எனப்படும் அந்த பெண் விபச்சாரத் தொழில் செய்வதோடு, தனது வாடிக்கையாளர்களை ஆபாசப் படமெடுத்தும் ஆட்களைக் கடத்தி மிரட்டிப் பணம் பறிப்பதும், கிரிமினல் குற்றக் கும்பல்களை வைத்து வீடுவீட்டுமனைத் தொழில் புரிந்ததாகவும், இரண்டு காங்கிரசு அமைச்சர்கள், ஏழு சி.பி.எம். தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், போலீசு, ஐ.ஜி வரை பல அதிகாரிகள் உட்பட பல முக்கியப் புள்ளிகள் அந்தத் தரகு பெண்ணின் வாடிக்கையாளர்கள் என்பதும் வெளியே வரத் தொடங்கியது.

 

முதலில் அனாதரவான ஒரு விதவைப் பெண்ணுக்கு உதவப் போனபோது தான் கடத்தப்பட்டதாகவும், பின்னர் தனது வீட்டு வேலைக்கு ஆள் வைப்பதற்காக அந்தப் பெண்ணிடம் உதவி நாடப்போனபோது தான் கடத்தப்பட்டதாகவும் மாறிமாறி தந்திரி கண்டரரு மோகனரு உளறினார். ஆனால், கிரிமினல் குற்றக் கும்பல் தலைவி சோபா ஜான் விபச்சாரம் நடத்தி வந்த அடுக்குமாடி வீட்டிற்குத்தான் தந்திரி போயுள்ளார், சோபா மற்றும் தந்திரியுடன் வைத்து நிர்வாண புகைப்படமெடுக்கப்பட்ட பெண் சாந்தா ஆகியோர் ஏற்கெனவே விபச்சார வழக்கில் சிக்கியவர்கள், மேலும் பல விபச்சாரிகள், சினிமா நடிகைகளுடன் தந்திரி உறவு வைத்திருந்தார், தந்திரி மட்டுமல்ல, கேரளாவின் பல முக்கிய புள்ளிகள் சோபாவின் வாடிக்கையாளர்கள் என்ற உண்மை வெளியானது.

 

இதனால் பதறிப் போனது தந்திரியை விட கேரளாவை ஆளும் போலி கம்யூனிஸ்டுகளின் அரசுதான். சோபா கும்பலின் அரசியல் அதிகார புள்ளிகளுடனான தொடர்புகள் மற்றும் தொழில் இரகசியங்களையெல்லாம் விசாரிக்க வேண்டாம்; அவற்றைக் கேட்டு உண்மையான விவரங்களை அறியும் வகையில் மிரட்டவோ, வதைக்கவோ கூடாது; அவர்களை மரியாதையுடன் நடத்தவேண்டும் என்று போலீசுக்கு வாய்வழி ஆணைகள் போட்டது, கேரள அரசு. சபரிமலை தந்திரி கண்டரரு மோகனரு தன்னைக் கடத்தி, பணம் நகை பறித்ததாகக் கொடுத்த புகாரை மட்டும் விசாரிப்பதோடு நின்று கொள்ளவேண்டும் என்று தடையும் விதித்தது.

 

அய்யப்பன் கோவில் ""புனித''த்தைக் காப்பதோடு, கேரள அரசியலின் ""தூய்மை''யைக் காப்பது என்ற புதிய கடமையும் போலி கம்யூனிஸ்டுகளுக்கு வந்துவிட்டது! ஏற்கனவே, "மகர ஜோதி' காட்டி பக்தர்களை ஏய்க்கும் ""ஆன்மீக''ப் பணியையும் இந்தப் போலி கம்யூனிஸ்டுகளின் அரசு கடமை உணர்வோடு செய்து வந்திருக்கிறது. அதாவது, காலனி மற்றும் காங்கிரசு ஆட்சியாளர்களின் அடியொற்றி, கேரள அரசின் அதிகாரத்தின் கீழ் வரும் மின்வாரிய மற்றும் காட்டிலாகா அதிகாரிகளை போலீசுக் காவலுடன் ஆண்டுதோறும் சபரிமலைக்கு அனுப்பி, கற்பூரம் கொளுத்தி ""மகர ஜோதி'' காட்டி, அது அய்யப்பனின் மகிமையென்று நாடகமாடுவதைத் தொடர்ந்தார்கள். இப்போது சோபா கும்பலுடன் தனது கட்சி பிரமுகர்கள் உட்பட அரசியல் அதிகாரிகளின் தொடர்பை மூடிமறைத்தும், சபரிமலையில் தந்திரியை மாற்றி, பரிகார பூசை நடத்தியும் போலி கம்யூனிஸ்டுகள் தமது சமூகக் கடமையாற்றுகிறார்கள்!


போலி முத்திரைத்தாள் வழக்கு முக்கியப் புள்ளிக ளைக் காப்பதற்கு சி.பி.ஐ. முயற்சி


போலி முதல் தகவல் அறிக்கை மோசடி சுண்டைக்காய் அளவுக்கு என்றால், போலி முத்திரைத்தாள் மோசடி சுரைக்காய் அளவுக்குப் பெரியது. 3,000 கோடி ரூபாய் முதல் 32,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்தப் போலி முத்திரைத்தாள் மோசடி நடந்திருப்பதாக பலவாறு மதிப்பிடப்படுகிறது. இதற்கு மேலும் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நாடு முழுவதும், முக்கியமாக 18 மாநிலங்களில் 72 நகரங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்திருக்கிறது.

 

ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, மகாராட்டிரம், உ.பி., மேற்கு வங்கம், ம.பி., பஞ்சாப் அரியானா போன்ற முக்கிய பெரிய மாநிலங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ. எம்.பி.க்கள், உயர்மட்ட போலீசு அதிகாரிகள் வரை சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

 

மும்பையைச் சேர்ந்த அப்துல் கரீம் தெல்கிதான் போலி முத்திரைத்தாள் மோசடியின் சூத்திரதாரி என்று சொல்லப்படுகிறது. அவனுக்காக மகாராட்டிரம் மற்றும் தென் மாநிலங்களுக்கிடையிலான வலைப்பின்னலை உருவாக்கியவன் சேக் வாகீது என்பவன். தமிழ்நாட்டில் அவனுடைய முகவர் நிஜாமுதீன். கர்நாடகாவில் தெல்கியின் வழக்கறிஞர் அப்துல் ரஷீது குல்கர்ணி. இவர்களில் பலர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டும் ""மேலிட''த் தலையீடு காரணமாக வழக்கு எதுவுமின்றிப் பாதுகாப்பாக விடுதலை செய்யப்பட்டதோடு, தொழிலைத் தொடரவும் அனுமதிக்கப்பட்டனர்.

 

ஆந்திராவில் தெலுங்கு தேச அமைச்சர் சி.கிருஷ்ணா யாதவும் அவரது அடியாட்படையும் தெல்கியின் நம்பகமான கூட்டாளிகளாகச் செயல்பட்டு வந்தது 1999லேயே தெரியவந்தது. அமைச்சரின் பதவி பறிபோனாலும், மகாராட்டிர போலீசாரால் 2003 லேயே கைது செய்து விசாரிக்கப்பட்டாலும், தெலுங்கு தேச அரசு அவர்களுக்குப் பாதுகாவலாக நின்று வழக்கு எதுவும் பதியப்படாமல் காத்தது.

 

மும்பை மாநகர போலீசு ஆணையாளர் ஆர்.எஸ். சர்மா, ஐ.ஜி. சிரீதர் வாகலே உட்பட ஏழு உயர் போலீசு அதிகாரிகள் தெல்கியிடம் இலஞ்சம் பெற்றதாக வழக்குகள் உள்ளன. சிலர் கைதும் செய்யப்பட்டனர். மகாராட்டிரம் துலே தொகுதி எம்.எல்.ஏ. அனில்கோரே, தெல்கியின் கூட்டாளியாக இருந்துள்ளார். அமைச்சர் அசோக் சவான் உதவியுள்ளார். போலீசு மந்திரியும் துணை முதல் மந்திரியுமான சகான் பூஜ்பால் போலீசு அதிகாரிகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசியிருக்கிறார்.


ஒரு சிறிய மோசடி வழக்கில் 1994ஆம் ஆண்டு கைதாகிச் சிறையிலடைக்கப்பட்டிருந்த தெல்கி, அங்குதான் போலி முத்திரைத்தாள் மோசடித் தொழிலைக் கற்றுக் கொண்டான். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட முத்திரைத்தாள்களை வாங்கி, மைகளை அழித்துவிட்டு விற்கும் தொழிலில் ஈடுபட்ட தெல்கி, 1995 ஆண்டு 16 இலட்சம் ரூபாய் மதிப்புடைய முத்திரைத்தாள் வழக்கு உட்பட 4 வழக்குளில் சிக்கினான். ஆனால், மும்பை குற்றப்பிரிவு இணை ஆணையாளராக இருந்த சர்மா தயவினால் கைதாகாமல் தப்பினான்.

 

அதன்பிறகு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய போலி முத்திரைத் தாள்களைப் பல வழிகளிலும் தயாரித்து, நாடு முழுவதும் பல முகவர்களை நியமித்து புழக்கத்தில் விட்டான். இரத்து செய்யப்பட்ட முத்திரைத்தாள்களை, இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி மைகளை அழித்துவிட்டு ""புத்தம் புதியதாக'' மாற்றி விற்பனை செய்தான். அரசு ரூபாய் நோட்டுக்களையும் முத்திரைத் தாள்களையும் அச்சிடும் நாசிக் அச்சகத்தையே பயன்படுத்தி கணக்கில் வராத முத்திரைத்தாள்களை ஏராளமாக அச்சிட்டு விற்பனை செய்தான். அரசு அச்சகத்தில் இருந்து அனுப்பப்படும் முத்திரைத்தாள் பார்சல்களை இடைமறித்துத் திருடி, தானே தனது முகவர்கள் மூலம் விற்பனை செய்தான். அரசு அச்சகத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு ரூபாய் மதிப்புடைய முத்திரைத்தாள்கள் அனுப்பப்பட்டன, எவ்வளவு போய்ச் சேர்ந்தன, எவ்வளவு காணாமல் போயின என்ற விவரம் அரசிடம் கிடையாது; இது தெல்கிக்கு வசதியாகப் போய்விட்டது.

 

அரசு அச்சகத்திலிருந்தே, பழுதடைந்தது என்று ஏலம் விடப்பட்ட நான்கு அச்சு இயந்திரங்களையும் மூன்று துளைபோடும் கருவிகளையும் வாங்கி, முன்னாள் அரசு அச்சக ஊழியர்களையே வைத்து ஏராளமாக முத்திரைத் தாள்கள் அச்சிட்டு, மும்பையில் மட்டும் 29 அலுவலகங்களைக் கொண்ட வலைப்பின்னலை உருவாக்கி விற்பனை செய்தான். இந்திய எண்ணெய்க் கழகம், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் போன்ற அரசுடைமை நிறுவனங்களுக்கே தனது முகவர்களை அனுப்பி 5 சதவீத கழிவு கொடுத்து அரசுக்கே நேரடி விற்பனையையும் செய்தான்.

 

அரசியல் கட்சி வேறுபாடின்றி நிதியை வாரி வழங்கியிருக்கிறான். அரசியல் பிரமுகர்களுக்கும் போலீசு அதிகாரிகளுக்கும் நட்சத்திர விடுதிகளில் விருந்து படைத்திருக்கிறான். இவனிடம் இலஞ்சம் வாங்கியே ஒரு கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை சொத்துக்களைக் குவித்துள்ள மும்பை போலீசில் தனது கூட்டாளிகளைப் பிடிப்பது தெல்கிக்கு சிரமமே கிடையாது. ஜெயலலிதாசசிகலா கும்பலின் ஏவலதிகாரியும் குற்றப் புலனாய்வும் பிரிவு டி.ஐ.ஜி.யுமான முகமது அலி, பல இலட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு தெல்கியின் முகவர் நிஜாமுதீனை வழக்குப் போடாமல் விடுதலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வளவு பெரிய மோசடி செய்த தெல்கி, மும்பையில் ஐந்து நட்சத்திர வாழ்க்கை நடத்தி வந்தபோதும், அவனது முகவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் போலி முத்திரைத்தாள்கள் சிக்கியபோது எவ்விதப் பயமுமின்றி தொழிலைத் தொடர்ந்தான். மகாராட்டிரத் தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் இலஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்திவரும் பிரபல காந்தியவாதி அன்னா ஹசாரே, 2003ஆம் ஆண்டு தொடுத்த ஒரு பொதுநல வழக்கின் கீழ் மும்பை உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, தெல்கி கும்பலின் மோசடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. தற்போது கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டும் கூட, அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் சிறையிலும் நட்சத்திர வாழ்க்கை நடத்துகிறான், தெல்கி.

 

போலி முத்திரைத்தாள் மோசடி சூத்திரதாரி தெல்கிக்கு ஒரு பழக்கம் இருந்தது. அரசியல் பிரமுகர், போலீசு அதிகாரி யாருடன் பேசினாலும் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, உரையாடலைப் பதிவு செய்து வைத்துக் கொள்வான். அப்படிப் பதிவு செய்யப்பட்ட 13 குறுந்தகடுகளில் முதலில் நான்கை மட்டுமே வழக்கு மன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். தெல்கியின் கோரிக்கையின் பேரில் மேலும் ஏழு தகடுகளை மட்டும் தாக்கல் செய்தனர். அவையும் தெளிவாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் நாசம் செய்துள்ளன. தெல்கியோடு வழக்குகளில் சிக்காமல் பல அரசியல் பிரமுகர்கள், போலீசு அதிகாரிகளைக் காப்பதற்கே இந்த முயற்சி நடக்கிறது.

 

***

இவை மூன்றும் சிறிய அளவிலான குற்றவிவகாரங்கள்தாம். அரசியல்கிரிமினல் குற்றக் கும்பல்களால் திட்டமிட்டு, அமைப்பு ரீதியில் நடைபெறும் குற்றவிவகாரங்களும் ஏராளமாக உள்ளன. அவை விதிவிலக்கின்றி சட்டம் மற்றும் நீதியின் காவலர்களால் மூடி மறைக்கப்பட்டு, குற்றவாளிகள் பெரிய மனிதர்களாக வலம் வருகிறார்கள். பங்கு பத்திர ஊழல் மோசடிகள், அனைத்துக் கட்சித் தலைவர்களும் சம்பந்தப்பட்ட ஜெயின் டயரி விவகாரம், அரசியல் வாதிகள் போலீசு அதிகாரிகள் கிரிமினல்கள் அடங்கிய முக்கூட்டை அம்பலப்படுத்திய வோரா கமிட்டி அறிக்கை விவரங்கள், இன்றைய அரசியல் சமூக அமைப்பு முழுவதும் புழுத்து நாறுவதையே காட்டுகின்றன.


மு ஆர்.கே.