Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் கருணையினால் அல்ல…

கருணையினால் அல்ல…

  • PDF

12_2006.jpg

மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்; ஒழிக்கவே கூடாது என்ற எதிரும் புதிருமான கருத்து மோதல்களை அப்சலின் வழக்கு, மீண்டும் முன்னணிக்குக் கொண்டு வந்துவிட்டது. அப்சல் மீதான குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்படாததாலும்; இதுவொரு அரசியல்

 ரீதியான வழக்கõக இருப்பதாலும், இவ்வழக்கை காட்டி, மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பலமாக முன்வைப்பது எளிதாக இருக்கிறது.

 

அப்சலுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது எனக் கோரும் அறிவு ஜீவிகளும்; குட்டி முதலாளித்துவ சக்திகளும் (தமிழகத்தில் தலித் முரசு, அ.மார்க்ஸ், எஸ்.வி. ராஜதுரை போன்றோர்) அப்சலுக்கு மட்டுமல்ல; ஸ்டெயின்ஸ் பாதிரியாரை எரித்துக் கொன்ற இந்து மதவெறியன் தாராசிங்; குஜராத்தில் பெஸ்ட் பேக்கரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோர்; தன்னுடன் படித்த சக மாணவி பிரியங்கா மட்டூவைப் பாலியல் பலாத்காரம் செய்து, பின் படுகொலை செய்த சந்தோஷ் சிங்; விடுதி பணிப்பெண் ஜெஸிகா லாலை பணக்காரத் திமிரில் படுகொலை செய்த மனுசர்மா உள்ளிட்டு யாருக்குமே மரண தண்டனை வழங்கக்கூடாது எனக் கோருகின்றனர்.

 

பதினான்கு வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரப்படுத்திக் கொலை செய்த தனஞ்செய் சட்டர்ஜிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மனிதத் தன்மையற்றப் படுகொலை எனக் குறிப்பிடுகிறது, தலித் முரசு. (நவ. 2006)

 

""மரண தண்டனையால் குற்றங்கள் குறைந்து விடாது; தவறு செய்தவனைத் திருத்துவதாகத்தான் தண்டனை அமைய வேண்டும்; தண்டனை பழிக்குப் பழியாக, கொலைக்குக் கொலையாக அமைந்துவிடக் கூடாது'' என இவர்கள் மரண தண்டனை ஒழிப்புக்குக் காரணங்களை அடுக்குகிறார்கள்.

 

இந்து மதவெறியர்கள் யாரும் உணர்ச்சிவசப்பட்டு, சிறுபான்மை சமூகத்தினர் மீது கொலை, பாலியல் வன்புணர்ச்சி, சொத்துக்களைச் சூறையாடுவது ஆகிய கிரிமினல் குற்றங்களை நடத்துவதில்லை. மாறாக, நன்கு திட்டமிட்டு, அரசியல் அதிகார பலத்தோடு, இந்துமதவெறி பாசிச அரசியலை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் முசுலீம்கள் மீது இனவெறிப் படுகொலை நடவடிக்கைகளை ஏவிவிடுகிறார்கள்.

 

""சனநாயக'' சமூகத்தை, இந்து மதவெறி பிடித்த பாசிச சமூகமாக மாற்றியமைப்பதன் மூலம், சிறுபான்மையினருக்கு எதிராக மட்டுமல்ல, அனைத்துச் சாதிமதங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் ஒரு போரையே நடத்தி வருகிறார்கள். அத்வானி, மோடி, வாஜ்பாயி போன்ற இப்பாசிச சக்திகளுக்கு அவர்களின் மேல்சாதிவெறி; ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை அடகு வைக்கும் அவர்களின் துரோகச் செயல்களுக்காகவும் மரண தண்டனை அன்றி ஆயுட்கால சிறைத் தண்டனையா தர முடியும்? அப்படியே அவர்களுக்கு மரண தண்டனையைவிடக் குறைவான தண்டனை கொடுப்பதால், அவர்கள் திருந்தி சனநாயகவாதிகளாக மாறிவிடுவார்களா?

 

இந்தப் பாசிசப் பேர்வழிகளை விடுங்கள். தனக்கு ஒரு கோப்பை மது ஊற்றிக் கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக விடுதி பணிப்பெண் ஜெஸிகா லாலைக் கொலை செய்த மனுசர்மா; பிரியங்கா மட்டூவைக் கொலை செய்த சந்தோஷ் சிங் போன்ற கிரிமினல் பேர்வழிகள் கூட, தங்களின் குற்றச் செயல்களுக்காக இதுவரை வருந்தியதாகத் தெரியவில்லை. மாறாக, தங்களின் பணபலம் அதிகார பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வழக்கை நீர்த்துப் போகச் செய்யத்தான் முயன்றார்கள்; முயன்று வருகிறார்கள்.

 

ஜெஸிகா கொலையில் தண்டனை பெற்றுள்ள மனுசர்மாவின் மேல் முறையீட்டு வழக்கில், அக்கிரிமினல் பேர்வழிக்காக வாதாடும் ராம் ஜேத்மலானி, ""மது ஊற்றிக் கொடுக்க மறுத்ததற்காக மட்டும் ஜெஸிகா லால் கொலை செய்யப்படவில்லை'' என நீதிமன்றத்தில் நாணயமற்ற முறையில் வாதாடியிருக்கிறார். இதனை, எதிர்க்கட்சி வக்கீலின் வாதத் திறமையாக மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. விடுதி பணிப்பெண் என்றால் அவரை எப்படி வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம் என்ற பணக்காரத் திமிர்த்தனத்தின், ஆணாதிக்கத்தின் வக்கிர வெளிப்பாடு, இது.

 

மனுசர்மா போன்ற பணபலமும், அதிகார பலமும் கொண்ட குற்றவாளிகள், மக்கள் விரோத மாஃபியா கும்பல்கள் சிறைக்குள் தங்களின் குற்றச் செயல்களுக்காக வருந்துவதில்லை. மாறாக, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுப்பதன் மூலம், தங்களின் சொகுசு கிரிமினல் வாழ்க்கையை சிறைக்குள்ளும் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே, இப்படிப்பட்ட திருந்தாத ஜென்மங்களின் உயிர், மரண தண்டனையின் மூலம் பறிக்கப்படுவதால், சமூகத்திற்கு எந்த நட்டமும் கிடையாது.

 

தனஞ்செய் சட்டர்ஜிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து எழுதும் ""சமூக நீதித் திங்களிதழ்'' தலித் முரசு, மகாராஷ்டிரா மாநிலம் கயர்லாஞ்சியில் தாழ்த்தப்பட்டோரைக் கற்பழித்தும், கொடூரமாகக் கொலை செய்தும் வெறியாட்டம் போட்டுள்ள ஆதிக்க சாதி மிருகங்களுக்கும் மரண தண்டனை கூடாது என எழுதத் துணியுமா? அப்படி எழுதினால், தாழ்த்தப்பட்ட மக்களே, இவர்களின் முகத்தில் காறி உமிழுவார்கள்.

 

மரண தண்டனை என்பது குற்றவியல் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; இத்தண்டனையை வெறும் பழிக்குப்பழி எனப் பார்ப்பது, அதனின் பின்னுள்ள வர்க்க அரசியலைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறது.

 

நாடாளுமன்றத் தாக்குதலில் அப்சலின் பாத்திரம் வேறு மாதிரியாக இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வோம். நீதிமன்ற விசாரணையும் முறையாக நடந்து அப்சலின் ""குற்றம்'' நிரூபிக்கப்பட்டதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுது, மரண தண்டனை ஒழிய வேண்டும் எனக் கோருபவர்களால், அப்சலின் குற்றத்தையும், மரண தண்டனை விதிக்கப் பெற்ற பல்வேறு கிரிமினல்களின் குற்றத்தையும் பிரித்துச் சொல்லத் துணிவார்களா?

 

இந்திய தேசிய வெறி இந்து மதவெறி பிடித்த நீதிமன்றங்களால் அப்சல் பழி வாங்கப்பட்டுள்ளார் என்ற பொருளில் மட்டும், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நாம் ரத்து செய்யக் கோரவில்லை. இந்த நாட்டு மக்களின் மீது மேலிருந்து இந்து மதவெறி பாசிசத்தைத் திணிக்கும் கருவியாகவும், ஏகாதிபத்தியங்களின் ஏவல் நாயாகவும் இந்திய நாடாளுமன்றம் இருப்பதால், அதன் மீதான தாக்குதலை இந்திய இறையாண்மையின் மீதான தாக்குதலாகப் பார்க்க முடியாது என்ற புரட்சிகர அரசியலின் அடிப்படையில் இருந்தும், அப்சலை விடுதலை செய்ய வேண்டும் என்கிறோம். அப்சலுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை இந்திய அரசின் பாசிசத் தன்மையை எடுத்துக்காட்டுவதாக நாம் கூறுகிறோம். ஆனால், மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்தினரோ, அப்சலுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்துவிட்ட கறை எனக் கூறுவதன் மூலம் அதன் பாசிசத் தன்மையை மூடி மறைக்கிறார்கள்.

 

அப்சல் வழக்கில் மட்டுமல்ல, ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் கூட இந்திய நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதில் சட்ட விரோதமாகத்தான் நடந்து கொண்டன. புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் கூட, அவர்களைக் கைவிட்டுவிட்ட அந்த நேரத்திலும், ""இந்தியா நடத்திய ஈழ ஆக்கிரமிப்புப் போரின் எதிர்விளைவுதான் ராஜீவ் கொலை; எனவே, அது போர்க்குற்றவாளிக்கெதிரான நடவடிக்கை'' என்ற அடிப்படையில், நாம் ராஜீவ் கொலையில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரினோம்.

 

ஆனால், மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் யாரும் இன்று கூட இந்த உண்மையைப் பேச மறுக்கிறார்கள். மாறாக, ""இந்த நால்வருக்காகக் கேட்கவில்லை; மரண தண்டனையே முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றுதான் கோருகிறோம்'' என்ற முதலாளித்துவ மனிதாபிமானத்தின் அடிப்படையில்தான் அக்கோரிக்கையை எழுப்பி வருகிறார்கள்.

 

வர்க்க, சாதி, இன ஒடுக்குமுறை நிலவும் சமுதாயத்தில், அந்த ஒடுக்குமுறைகளின் விளைவாக எந்த நீதிமன்ற விசாரணையும் இன்றி அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பல வடிவங்களில் பறிக்கப்படுகிற சமுதாயத்தில், அவற்றுக்கெதிராகப் போராடும் மக்களுக்கும் மரண தண்டனை விதிக்கும் உரிமையுண்டு. இந்தப் புரட்சிகர அரசியலின் அடிப்படையில் இருந்துதான் மரண தண்டனையை அணுக வேண்டும்; மாறாக, முதலாளித்துவ மனிதாபிமான அடிப்படையில் மரண தண்டனையை அணுகுவது, புரட்சிகர வன்முறையையும் குற்ற நடவடிக்கையாக்கிவிடும். புரட்சிகர அரசியலின் நியாயத்தைத் தூக்கிலிட்டு விடும்.


· மாரி

Last Updated on Friday, 09 May 2008 10:46