Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

  • PDF
02_2007_pj.jpg

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் எனும் அடிமைச் சாசனத்தையும் அதன் கொடிய விளைவுகள் பற்றியும் உழைக்கும் மக்களுக்கு உணர்த்திய பு.ஜ.வுக்கு எனது நன்றிகள்.
விவேகானந்தன், சென்னை.

 

· பார்ப்பன இந்துக் கோயில்கள் அனைத்தும் தீண்டாமையின் மையங்கள்தான் என்பதை ஜனவரி இதழின் பின் அட்டை எடுப்பாக உணர்த்தியது. நாடெங்கும் தொடரும் தீண்டாமைக் கொடுமைக்கு இன்னுமொரு சாட்சியம்தான் கேரேதகடா கிராமத்தின் ஜெகந்நாதர் கோயில்.
ஜீவா, ஜெயங்கொண்டம்.

 

· தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களுக்காகச் சங்கம் என்ற பெயரில் ஒரு மனமகிழ் மன்றத்தைக் கட்டியுள்ள சி.பி.எம். கட்சியினர், இங்கே தமிழகத்தில் டாஸ்மாக் சாராயக் கடை ஊழியர்களுக்கும், திருப்பதியில் கோயில் பூசாரிகளுக்கும் சங்கம் கட்டி, சந்தா வசூலித்து பிழைப்பு நடத்துவதை சேர்த்து அம்பலப்படுத்தியிருந்தால், ""ஜாடிக்கேத்த மூடி'' கட்டுரை இன்னும் எடுப்பாக அமைந்திருக்கும். பெரியார் சிலை உடைப்புக்கு எதிராக நடந்த போராட்டம் பற்றிய கட்டுரை உரிய தருணத்தில் சிறப்பாக வெளிவந்துள்ளது.
இரா. கணேசன், சாத்தூர்.

 

· பெரியார் சிலை உடைக்கப்பட்ட நிலையில், அதற்கெதிராக இந்துவெறியர்களை எதிர்த்துப் போராடாமல், தி.மு.க. அரசைக் காப்பாற்றக் கிளம்பிய வீரமணி கும்பலின் துரோகத்தனத்தைத் திரைகிழித்துக் காட்டியது சிறப்பு. ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்பினர் இந்து தேசிய நாயகன் இராமனை செருப்பால் அடித்து நடத்திய போராட்டங்கள்தான், இது பெரியார் பிறந்த மண் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. தனியார்மய தாராளமய சேவையும் பார்ப்பன சேவையும் தனித்தனியானது அல்ல; அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை சி.பி.எம்.மின் காஞ்சி மட சங்கராச்சாரிக்கு அளித்த அரசு மரியாதை நிரூபித்துக் காட்டுகிறது.
அலாவுதீன், மணமேல்குடி.


· இந்து மதவெறியர்களின் தேசியத் தலைவன் இராமன் படத்தைச் செருப்பால் அடித்துத் தீயிட்டுக் கொளுத்திய புரட்சிகர அமைப்புகளின் போராட்டமும், இந்துவெறியர்களின் குதர்க்க வாதங்களுக்கு ஆப்பறைந்த கட்டுரையும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. ஒரு வாசகன் என்ற முறையில், உழைக்கும் மக்களிடம் பு.ஜ. இதழை அறிமுகப்படுத்திப் பிரச்சாரம் செய்வது எனது கடமையாக உணர்கிறேன்.
சம்புகன், சிவகங்கை.

 

· பார்ப்பன மதவெறியர்களிடமிருந்து பெரியார் சிலையைக் காப்பதைவிட, பெரியாரிஸ்டுகளிடமிருந்து பெரியாரைக் காப்பதுதான் முதன்மையான பணி என்பதை பு.ஜ. எடுப்பாக உணர்த்தியது.
லெனின் காந்தி, திருச்சி.

 

· தரகுப் பெருமுதலாளி டாடாவின் ஊர்க்காவல் படையினராகச் சீரழிந்துவிட்ட சி.பி.எம். கட்சியில், புரட்சியை நேசிக்கும் அணியினர் இனியும் இருக்க முடியுமா என்று பு.ஜ.வின் கட்டுரைகள் தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றன. துரோகிகளுக்கு எதிரான இந்த சவுக்கடி தொடரட்டும்.
இரா.கதிரவன், சென்னை.

 

· கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக டாடா மார்க்சியம் பேசிக் கொண்டும், பார்ப்பன சேவை செய்து கொண்டும் சி.பி.எம். கட்சியினர் துரோகிகளாகச் சீரழிந்துவிட்டனர். சாயம் வெளுத்த இச்சந்தர்ப்பவாதிகளை உழைக்கும் மக்கள் புறக்கணிக்க வேண்டியதுதான் இன்றைய தேவையாக உள்ளது.
கோ. நாகராசன், கீழச்சீவல்பட்டி.

 

· ஜனவரி இதழின் அட்டைப்படமும் வடிவமைப்பும் நேர்த்தியாக அமைந்துள்ளது. பெரியார் சிலை உடைப்புப் பற்றிய கட்டுரை பார்ப்பன மதவெறியர்களையும், சோளக்கொல்லை பொம்மைகளாகிவிட்ட பெரியாரிஸ்டுகளையும் அம்பலப்படுத்தி உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது. பெரியார் சிலையை வெண்கலத்தில் உருக்கி வார்ப்பதாலோ, இரும்புக் கூண்டுக்குள் அடைத்து வைப்பதாலோ பார்ப்பன மதவெறியை வீழ்த்த முடியாது என்பதை உணர்த்திய இக்கட்டுரை சிறப்பு.
நிர்மலா, திருச்சி.

 

· பக்தர்கள் என்ற போர்வையில் இந்துவெறியர்கள் எழுப்பும் அபத்தமான வாதங்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து அவர்களை அம்பலப்படுத்திக் காட்டுவதாகவும், கையாலாகாத வீரமணி கும்பலைத் தோலுரிப்பதாகவும் வெளியான கட்டுரை பெரிதும் பயனளித்தது. வாசகர் வட்டக் கூட்டத்தின் இறுதியில், ""சி.பி.எம்: சமூக பாசிஸ்டுகள்!'' என்ற தலைப்பில் வழக்குரைஞர் தோழர் இராமலிங்கம் சிறப்புரையாற்றினார். மறுகாலனியாக்கத்தின்கீழ் போலி கம்யூனிஸ்டுகள் எடுத்துள்ள புதிய அவதாரத்தை விளக்கி அவர் ஆற்றிய உரை, துரோகிகளை இனங்காட்டுவதாகவும், புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள வேண்டிய அவசியத்தை விளக்குவதாகவும், வாசகர்களுக்கு சித்தாந்தக் கல்வியளிப்பதாகவும் அமைந்தது.
வாசகர் வட்டம், திருச்சி.

 

· பெரியாரின் வாரிசுகள் எனப்படுவோர், தமது கட்சிக்கும் தொழில் நிறுவனத்துக்கும் பெரியாரை ஒரு வியாபாரச் சின்னமாக பயன்படுத்திவரும் சூழலில், பெரியார் தி.க.வினரும் ம.க.இ.க. முதலான புரட்சிகர அமைப்புகளும் நடத்திய போராட்டங்கள், இவர்கள்தான் பெரியாரின் உண்மையான வாரிசுகள் என்பதை நிரூபித்துள்ளது. மே.வங்கத்தின் சிங்கூரில் டாடாவுக்கு விசுவாச சேவை, கேரளத்தில் பார்ப்பன பயங்கரவாதி ஜெயேந்திரனுக்கு அரசு மரியாதை, தகவல்தொழில்நுட்பத் துறையில் மனமகிழ்மன்றம் நிறுவியுள்ள சி.ஐ.டி.யு.வின் "புரட்சிகர' சங்கம் என சி.பி.எம்.மின் பல்வேறு பரிணாமங்களை வெளிக் கொணர்ந்த ஜனவரி இதழ் சிறப்பு.
கரிகாலன், தஞ்சை.

 

· இந்துவெறி இராம.கோபாலன் வகையறாக்களின் குதர்க்கவாதங்களுக்கு பதிலளித்து எழுதப்பட்ட கட்டுரை சம்மட்டி அடியாக அமைந்துள்ளது.
ச. பரமசிவம், கோவை.

 

· இராணுவ வலிமையைக் காட்டி ஏகாதிபத்திய சமூகத்திடம் ஆதரவு பெற்று இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயலும் புலிகள் மற்றும் சிங்கள இனவெறி பாசிஸ்டுகளின் புதிய உத்தியானது, எவ்வாறு எதார்த்த நிலைக்கு எதிரானது என்பதையும், அதனால் ஈழத் தமிழருக்கு நேரும் பேரழிவுகளையும் தலையங்கம் கள நிலைமைகளிலிருந்து துல்லியமாக உணர்த்தியுள்ளது.
இரா. மணிகண்டன், சூசுவாடி.