Language Selection

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த வாரம் சென்னையில் பிரசன்னா விதானையின் With You Without you! திரைப்படம் இரு திரையங்குகளில் வெளியிடப்பட்டது. ஆனாலும் அது சில காட்சிகளில் பின் கடந்த சனிக்கிழமையே காட்சிகள் நிறுத்தப்பட்டது. காரணம் திரையரங்க உரிமையாளருக்கு விடப்பட்ட மிரட்டலாகும்.

இப்படம் சென்னையில் திரையிடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே (17, 18.06.2014) "ஒப நத்துவ ஒப எக்கா சிங்களத் திரைபடத்தில், தமிழ் பெண் ஒருவர் சிங்களவனை காதலித்து திருமணம் செய்வதனால், தமிழின உணர்வாளர்கள் அதை சென்னையில் திரையிடுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்" என்ற செய்தி யாழ்ப்பாண உதயன் பத்திரிகை தொடக்கம் பல இந்திய இணையத் தளங்களிலும் வெளியாகியது. முகப்புத்தகத்தில் குறிப்பிட்ட ஒரு தமிழினவாத அமைப்பின் உறுப்பினர்கள் திரையரங்குகளின் தொலைபேசி இலக்கங்ககளை வெளியிட்டு, தமது ஆதரவாளர்களை திரையரங்குகளுக்கு தொடர்பு கொண்டு "With You Without you! "பிறகு" ஒப நத்துவ ஒப எக்கா" திரைபடத்தை நிறுத்துமாறு கோரிக்கை வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

தென் இந்திய தமிழின உணர்வாளர்களின் அதாவது தமிழினவாதிகளின் சில அமைப்புகள் தாம் தான் பின்னணியில் இருந்தனர் என்பதை மறுத்தனர். ஆனால் "அப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல அவர்கள் இவ்விடயம் சம்பந்தமாகப் பங்கு கொண்ட ஊடக நிகழ்சிகளே அவர்கள் தான் பின்னணியில் இருந்தனர் என்பதை அம்பலப்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் தங்கியிருந்த இயக்குனர் பிரசன்னா விதானையின் முயற்சியாலும், தமிழ் ஸ்டூடியோ அரூண் அவர்களின் உழைப்பினாலும் படம் மறுபடியும் திரையிடப்பட்டது. இதற்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் பெயர் வெளியில் சொல்லாமல் உதவிய  தோழர்களின் சிறு பொருளாதார பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

24-06-2014 செவ்வாய், பின்னேரம் 7 மணிக்கு RKV ஸ்டுடியோஸ் இல் மறுதிரையிடப்பட்ட காட்சியானது அமோக வெற்றியாகும். இவ் வெற்றியானது பொருளாதார அடிபடையில் இல்லாவிடினும், அரசியல் மற்றும் கலையியல் ரீதியான வெற்றியாகும். அனைத்து இன வாதத்துக்கும் எதிரான வெற்றியாகும்!

திரையிடலின் பின்னால் நடைபெற்ற இயக்குனருடனான சந்திப்பானது, சில சந்தர்ப்பவாத சக்திகளால் தமது சுய லாபத்தை - அரசியல் இருப்பை நோக்காகக் கொண்டு குழப்பியடிக்கப்பட்டது. அத்துடன் தமிழினவாதிகள் தமது சுயத்தை நிருபித்தனர்.

இது பற்றி புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமைத் தோழரும், சமவுரிமை இயக்கத்தின் பிரான்ஸ் செயற்பாட்டாளருமான தோழர். ரஜாகரன் கருத்துக் கூறுகையில் "சென்னையில் வெற்றிகரமாக மறு திரையிடலை நடாத்திய அனைவருக்கும் நன்றிகள். இப்படத்தை நாமும் எமது சகோதர அமைப்புகளும் இணைந்து பாரிஸ், லண்டன், நப்போலி (இத்தாலி) போன்ற நகரங்களில் திரையிடவுள்ளோம். அனைத்து மக்கள் நலன் விரும்புவோரும் இதை ஆதரிக்க வேண்டும். காரணம், சகோதர இன மக்களிடமிருந்து சுயவிமர்சனமாக - சிறு ஒளிக்கீற்றாக வெளிவரும் அனைத்துக்கும் நாம் ஆதரவு வழங்க வேண்டும். குறிப்பாக தமிழ் மக்களின் விடுதலை கோருவோர் இதைச் செய்ய வேண்டும்" என்றார்.