Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் சி.பி.எம். மீது ஆர்.எஸ்.எஸ். தாக்குதல்: பழங்கதை பதிலடியாகாது!

சி.பி.எம். மீது ஆர்.எஸ்.எஸ். தாக்குதல்: பழங்கதை பதிலடியாகாது!

  • PDF

04_2008.jpg

திரிபுரா மாநிலத்தில் ஆறாவது முறையாகப் போலி மார்க்சிஸ்டுக் கட்சி தலைமையிலான போலி இடதுசாரிக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதை வரலாற்று முக்கியத்துவமென்று அக்கட்சியின் இந்தியத் தலைமையகமான புதுதில்லி ஏ.கே.ஜி.பவனில் கொண்டாடிக் கொண்டிருந்தது, மத்தியக் கமிட்டி. அப்போது அங்கு அதைவிட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஒன்று நடந்தது.

 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் ஆயுதபாணிகளாக வந்த ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் புதுதில்லி மேயர், நகரமன்ற உறுப்பினர்கள், போலி மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகத்தைத் தாக்கினர். கட்சியின் ஏழு மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட அணிகள் படுகாயமுற்றனர். கட்சியின் தலைமை கோயபல்சான சீதாராம் யெச்சூரியுடைய கார் உட்பட பல வாகனங்கள் கொளுத்தப்பட்டன; பிற பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அதேநாளில் தமிழ்நாட்டில் நாகர்கோவில், உத்தரகாண்டில் டேராடூன், ஆந்திராவில் ஐதராபாத் ஆகிய இடங்களில் கட்சி அலுவலகங்களும் கர்நாடகாவில் கட்சிச் செயலர் வீடும் ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. குண்டர்களால் தாக்கப்பட்டன.


போலி மார்க்சிஸ்டு கட்சியின் மீதான இந்த இந்து மதவெறி பாசிச பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்குக் காரணம், அந்த இரு தரப்புக்கும் இடையே கேரளாவில் நீடித்துவரும் வன்முறை மோதல்கள்; குறிப்பாக கண்ணூர் மாவட்டத்தில் சமீபத்தில் அதிகரித்துள்ள கொலைகள் ஆகும். கடந்த பத்து மாதங்களில் மட்டும் 12 போலி மார்க்சிஸ்ட் அணிகள் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் குறைந்தது 200 பேர் இரு தரப்பிலும் பலியாகியுள்ளனர். குறிப்பாக ஜனவரிமார்ச் மாதங்களில் கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் ஏழு சி.பி.எம். அணிகளும், 5 பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். உள்ளூர் பிரமுகர்களும் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகத்தான் நாட்டின் பல இடங்களில் சி.பி.எம். கட்சி மீது ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதற்கு ஐக்கிய முற்போக்கு மற்றும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் எல்லாம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.


""இந்தத் தாக்குதல் பாசிசத் தன்மை வாய்ந்த கோழைத்தனமானது. இம்மாதிரியான தாக்குதல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு சி.பி.எம். அணிகளை மிரட்டி, அச்சுறுத்திப் பணிய வைத்து விட முடியாது. அவற்றைத் தக்கமுறையில் எதிர்கொள்ளும் பாரம்பரியம் மிக்கது, சி.பி.எம். கட்சி. 197277இல் மேற்கு வங்கத்தில் அரை பாசிசத் தாக்குதல்களைச் சமாளித்து, ஆயிரக்கணக்கான அணிகள் உயிர் தியாகம் புரிந்து, பின்னர் நடந்த எல்லாத் தேர்தல்களிலும் வென்றும் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இட்லரின் பாசிச இராணுவத்தை முறியடித்த சோவியத் ஒன்றியத்தின் செஞ்சேனை பாரம்பரியத்தில் வந்த கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வை ஒன்றுமில்லாமல் செய்து இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பலப்படுத்துவோம்'' என்று சபதமேற்கிறது போலி மார்க்சிஸ்டு கட்சி.


இதெல்லாம் பழைய கதையும் வெற்று வாய்ச்சவடாலும்தான் என்பதை நாடறியும். போலி மார்க்சிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கம் மற்றும் கேரளத்தில் ஒன்றுமே இல்லாமலிருந்த ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. சமீப ஆண்டுகளில் வலுவாகக் காலூன்றியிருக்கின்றன. குறிப்பாக, கேரளத்தில் தற்போது பா.ஜ.க.வின் முக்கியப் பிரமுகர்களாக உள்ளவர்களில் பலர் முன்னாள் சி.பி.எம். கட்சியினர் அல்லது போலி கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களின் குடும்ப வாரிசுகள் தாம் என்ற உண்மை மறுக்க முடியாதது. மத்தியில் காங்கிரசுடன் தேர்தல் அரசியல் கூட்டு வைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பவாத நியாயவாதத்திற்காக மட்டுமே ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதாகப் போலி மார்க்சிஸ்டுகள் நாடகமாடி வருகின்றனர். மற்றபடி பாபரி மசூதி முதல் ""ராமசேது பாதுகாப்பு'' என்று இந்து மதவெறிக் கும்பல் கூறிக் கொள்ளும் சேதுக் கால்வாய் திட்ட எதிர்ப்பு வரை, எல்லா விவகாரங்களிலும் இந்துத்துவா கும்பலுடன் சமரசப் போக்கை கடைப்பிடிப்பதே போலி மார்க்சிஸ்டுகளின் கொள்கையாக உள்ளது. 1992 மும்பை, 2002 குஜராத், 2007 ஒரிசா என்று மதச்சிறுபான்மையினருக்கு எதிராக இந்து மதவெறி பாசிச பயங்கரவாதிகள் நடத்தி வரும் படுகொலை வெறியாட்டத்துக்கு எதிராக இந்தப் போலி மார்க்சிஸ்டுகள் என்ன செய்தார்கள்? ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடவில்லை என்பதிலிருந்தே இவர்களின் மதவாத எதிர்ப்பின் போலித்தனம் தெரிகிறது.


தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் என்னும் ஏகாதிபத்திய மறுகாலனியாக்கத்துக்கு மனிதமுகம் கொடுப்பது என்கிற தோரணையோடு மறைமுக ஆதரவு அளிப்பது, சிங்கூர்நந்திகிராம் விவசாயிகளிடமிருந்து அவர்களின் வாழ்வாதாரங்களான விளைநிலங்களைப் பிடுங்கி, பன்னாட்டு முதலாளிகளுக்குத் தொழில்மயமாக்குவது என்ற பெயரில் தாரை வார்ப்பது, சிறுவணிகர்களை ஒழிக்கும் ஏகபோகங்களுக்கு நடைபாவாடை விரிப்பது, போராட்டங்களுக்கு எதிராக தொழிலாளர்களை மிரட்டுவது என்று ஆயிரத்தெட்டு வழிகளில் மக்கள் விரோத, நாட்டு விரோத நடைமுறையைக் கொண்டுள்ள போலி மார்க்சிஸ்டுகள் கம்யூனிச பாரம்பரிய உரிமை பாராட்டுவது வெறும் கேலிக் கூத்துதான்!