Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் ரிலையன்ஸ் எதிர்ப்புஒட்டுக் கட்சிகளின் முகத்திரை கிழிந்தது!

ரிலையன்ஸ் எதிர்ப்புஒட்டுக் கட்சிகளின் முகத்திரை கிழிந்தது!

  • PDF

put_oct-2007.jpg

மே.வங்கத்தில் ஏகபோக ""பெண்டலூன்'' சூப்பர் மார்க்கெட்டுகளைத் தொடங்கி வைத்து "புரட்சி' செய்து வரும் சி.பி.எம். ஆட்சியாளர்கள், இப்போது ""ரிலையன்ஸ் பிரஷ்'' காய்கறி அங்காடிகள் மற்றும் ரிலையன்ஸ் பேரங்காடிகளைத் தொடங்க கதவை அகலத் திறந்து விட்டுள்ளனர். கொல்கத்தா நகரின் 76 ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்த ""பார்க் சர்க்கஸ்'' காய்கறி அங்காடியை ரிலையன்சுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்குக் கையளித்துள்ளனர். இதுதவிர ""பஜார்கள்'' என்று குறிப்பிடப்படும் நகரின் பல்வேறு அங்காடிகளையும் ரிலையன்சுக்குத் தாரை வார்த்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்டு மாதத்தில் கொல்கத்தா நகரின் கிரிஷ்பார்க் போலீசு நிலையம் அருகே நந்தாமுல்லக் தெருவில், ரிலையன்ஸ் பிரஷ் காய்கறி அங்காடி தொடங்க ஏற்பாடுகள் வேகமாக நடந்து வந்தன. தங்கள் வாழ்வைப் பறிக்க வந்துள்ள ரிலையன்சுக்கு எதிராக குமுறி எழுந்த சில்லறை வியாபாரிகள், பார்வர்டு பிளாக் கட்சியின் தலைமையில் திரண்டு கடந்த ஆகஸ்டு 18ஆம் நாளன்று முழக்கமிட்டபடியே ஊர்வலமாகச் சென்று அந்த ரிலையன்ஸ் கடையை அடித்து நொறுக்கினர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த "இடதுசாரி' போலீசு, சில்லறை வியாபாரிகள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்து, ரிலையன்ஸ் கடையைப் பாதுகாக்க போலீசு பட்டாளத்தை குவித்துள்ளது.

 

சில்லறை வியாபாரிகளின் திடீர் போராட்டத்தைக் கண்டு பீதியடைந்த ரிலையன்ஸ் நிறுவனம், தற்காலிகமாக, காய்கறி அங்காடிகளைத் திறப்பதை நிறுத்தி வைத்துள்ளது. ""ஐயோ, அப்படிச் செய்யாதீர்கள்! ரிலையன்ஸ் கடைகளுக்கு இம்மாநில அரசு முழுப்பாதுகாப்பு அளிக்கும்'' என்று உறுதியளித்து அழைக்கிறார், மே.வங்க அரசுச் செயலரான அமித்கிரண்தேப். இடது முன்னணியில் அங்கம் வகிக்கும் பார்வர்டு பிளாக், புரட்சி சோசலிஸ்டு கட்சி, வலது கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன ரிலையன்சுக்கு எதிராக சில்லறை வியாபாரிகளை அணிதிரட்டுவதைக் கண்டு ஆத்திரமடைந்த சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவரான பினாய் கோனார், ""இடது முன்னணியிலுள்ள கட்சிகளே இப்படிச் செய்வது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்; பெண்டலூன் கடைகள் திறக்கப்பட்டபோது எதிர்ப்பு காட்டாக இக்கட்சிகள், ரிலையன்சை மட்டும் இப்போது எதிர்ப்பது சந்தர்ப்பவாதமாகும்'' என்று பொரிந்து தள்ளுகிறார்.

 

ரிலையன்ஸ், பெண்டலூன் முதலான பேரங்காடிகளுக்குத் தாராள அனுமதி அளிப்பது மட்டுமல்ல; 1972ஆம் ஆண்டின் சந்தை முறைப்படுத்தல் சட்டத்தைத் திருத்தி தாராளமயமாக்கலுக்கு விசுவாச சேவை செய்யவும் மே.வங்க போலி கம்யூனிச அரசு தீர்மானித்துள்ளது. இச்சட்டத் திருத்தம், உள்நாட்டுவெளிநாட்டு பெருந் தொழில் நிறுவனங்கள் சில்லறை வணிகத்திலும், விவசாய நேரடிக் கொள்முதலிலும் ஈடுபட தாராள அனுமதி அளிப்பதோடு, ஒப்பந்த விவசாயத்துக்கு ஏராளமான சலுகைகளையும் அளித்துள்ளது; ஒப்பந்த விவசாயம் என்பது மிகப் பெரிய மோசடி என்று அம்பலப்பட்டுப் போயுள்ளதால், இத னைக் ""கூட்டுப் பங்கு விவசாயம்'' என்று பெயரை மாற்றி பித்தலாட்டம் செய்கிறது. இச்சட்டத் திருத்தம் மே.வங்க சட்டப் பேரவையின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

 

விவசாயத்தில் தாரளமயமாக்கலைத் திணித்து, விவசாய சந்தை முறைப்படுத்தல் சட்டத்தைத் திருத்த மே.வங்க அரசு முயற்சித்துவரும் வேளையில், ஏற்கெனவே இதனைச் செயல்படுத்தி வரும் 11 மாநிலங்களின் வரிசையில் 12வது மாநிலமாக உ.பி.யை இணைத்து, புதிய சந்தை சீர்திருத்தக் கொள்கையை கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று அறிவித்தார், அம்மாநில முதல்வரான மாயாவதி. தமது வாழ்வைச் சூறையாட வந்துள்ள இக்கேடுகெட்ட கொள்கையை எதிர்த்து உ.பி. விவசாயிகளும் சிறுவணிகர்களும் ஆங்காங்கே தன்னெழுச்சியாகப் போராடத் தொடங்கினர். இப்போராட்டத்தின் போதுதான் லக்னோ மற்றும் ராஞ்சி நகரங்களில் ரிலையன்ஸ் ஃபிரஷ் கடைகள் குறிவைத்துத் தாக்கப்பட்டன.

 

இத்தருணத்தில் அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக, மத்தியிலுள்ள காங்கிரசு கூட்டணி அரசு நெருக்கடிக்குள்ளாகி, ஆட்சி கவிழ்ந்து மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் என்ற ஊகமும் வதந்தியும் நிலவியது. அப்படி ஒருவேளை திடீரெனத் தேர்தல் வந்துவிட்டால், ஓட்டுப் பொறுக்குவதற்குத் தடையாக இக்கொள்கை அமைந்துவிடும் என்பதாலேயே திடீர் ""பல்டி''யடித்து இத்தாராளமயக் கொள்கையைச் செயல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்து, ரிலையன்ஸ் ஃபிரஷ் கடைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு மாயாவதி உத்தரவிட்டுள்ளார்; சாதகமான சூழலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.


இந்நிலையில், போலி கம்யூனிஸ்டுகள் முதல் தலித்திய தலைவி மாயாவதி வரையிலான அனைத்து ஓட்டுக் கட்சி துரோகிகளையும் அம்பலப்படுத்தி முறியடிக்காமல், விவசாயிகளும் சிறுவணிகர்களும் தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது; தாராளமயமாக்கலை வீழ்த்தவும் முடியாது.

 

· குமார்