Wed04242024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் சென்னை நகர விரிவாக்கத் திட்டம் : உழைப்பாளிகளை வெளியேற்றி உலக வங்கியின் ஆட்சி

சென்னை நகர விரிவாக்கத் திட்டம் : உழைப்பாளிகளை வெளியேற்றி உலக வங்கியின் ஆட்சி

  • PDF
PJ_11_2007.jpg

சென்னை மாநகரம் விழித்தெழும் முன்பே விழித்தெழுந்து இயங்கத் தொடங்கும் கூறு கட்டிக் காய்கறி விற்பவர்கள், வீட்டுக்கு வீடு பால் பாக்கெட் போடுபவர்கள், நடுத்தரமேட்டுக்குடி கனவான்களின் வீட்டு பத்துப் பாத்திரங்களையும் பளிங்குத் தரையையும் சுத்தம் செய்பவர்கள், மாநகரின் வனப்பை செதுக்கித் தரும் கொத்தனார்கள்சித்தாள்கள், மண்டல வாரியாக குப்பை அகற்றுபவர்கள், அடைத்து நாறும் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்பவர்கள் — என லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் இயக்கம் இல்லை என்றால் சென்னை மாநகரமே இல்லை எனலாம்.

 

உடலை உருக்கிப் போடும் கடின உழைப்பை ஈயும் இவர்களில் பலருக்கும் நல்ல உணவில்லை. இருக்க நல்ல இடமில்லை. வாடகை கொடுத்துக் கட்டுப்படியாகும் நிலையில் வருமானம் இல்லை. எனவேதான் இவர்களில் பலரும் குடியிருப்பது குடிசைகளில். கழிப்பறை, குளியலறை இல்லாத, காலை நீட்டிக் கூட தூங்க முடியாத, கொசுப்படை தாக்குதலுக்குள் முடங்கிட இவர்களுக்குக் கிடைத்தவையோ பக்கிங்காம் கால்வாய், அடையாறு, கூவம் போன்ற நீர்வழிகளின் கரையோரங்கள்தான்.


அதேபோல்தான் மெரீனா கடற்கரை, சாந்தோம் கடற்கரையை ஒட்டிக் குடியிருக்கும் மீனவர்களின் குடியிருப்புக்களும். மீன் பிடிக்கப் பயன்படும் வலைகள், கட்டுமரங்களை எளிதில் கடலுக்குள் கொண்டு செல்லவும், வலைகளை உலர்த்தவும், விரைவில் தொழிலுக்குச் செல்லவும் எனத் தேவையை ஒட்டிப் பல நூற்றாண்டுகளாக அவ்விடங்களில் மீனவர்கள் பாரம்பரியமாகக் குடியிருந்து வருகின்றனர்.


இவர்களது நிச்சயமில்லாத இந்த வாழ்க்கையிலும் மண்ணை அள்ளிப் போட வந்துள்ளது, ""சென்னை 2026'' எனச் சொல்லப்படும் மாஸ்டர் பிளான் திட்டம்.


குடிசைவாசிகள் வாழத் தகாத இடங்களில் வாழ்கிறார்கள் என்று சொல்லி, அதனால் அவர்களை சென்னையில் இருந்து அகற்றி மாநகர எல்லைக்கு வெளியே செம்மண்சேரிக்கு விரட்டத் தீர்மானித்துள்ளது, மாஸ்டர் பிளான் திட்டம். இம்மக்களால்தான் சென்னையின் நீர்நிலைகள் மாசுபடுவதாகவும், அவர்கள் நகரின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் மாஸ்டர் பிளான் குற்றம் சாட்டுகிறது. கழிப்பறைகள் இல்லாத குடிசை மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நகரின் சுகாதாரமே கெடுவதாயும் குற்றம் சாட்டுகிறது.


நீர்நிலைகளை மாசுபடுத்துவதாகக் குற்றம் சாட்டி சென்னையை விட்டுத் துரத்த வேண்டும் என்றால் முதலில் துரத்தப்பட வேண்டியவர்கள், இலட்சக்கணக்கான லிட்டர் கழிவை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் டைடல் பார்க் உள்ளிட்ட பல பன்னாட்டு ""சாப்ட்வேர்'' நிறுவனங்களும், நட்சத்திர விடுதிகளும்தான். மூன்று நாளைக்கு ஒருமுறை வரும் நீரை சிக்கனமாக செலவழிக்கும் குடிசைகளால் நீர்நிலை கெடுகின்றது என்பதை குடிசைகளைப் பற்றி அறிந்த எவருமே நம்ப மாட்டார்கள்.


பின் எதற்காக குடிசைகளைக் காலி செய்யச் சொல்கிறார்கள்?
2000ஆம் ஆண்டில் 286 கோடியாக இருந்த உலகின் நகர்வாழ் மக்கள் தொகை, 2030இல் 498 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள உலக வங்கி, அவ்வாறு நகர்மயமாகும் முக்கிய பெருநகராக சென்னையைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் சென்னை நகரோ, உலக வங்கியின் பசிக்கும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் ஏற்றதாக இருக்கவில்லையாம். வெளிநாட்டுப் பயணிகளின் கண்களுக்கு இக்குடிசைகள் வெறுப்பை உண்டு பண்ணுகின்றனவாம். எனவே, அடையாற்றிலும், கூவத்திலும் படகுப் போக்குவரத்துத் திட்டமும், இடிக்கப்படும் குடிசைகளின் இடிபாடுகளின் மேலேயே சாலைகளைப் போட்டு ஆற்றங்கரைகளை இரு வழிச் சாலைகளாக்கும் திட்டமும் தயாராகிக் கொண்டுள்ளன.


இனிமேல் சென்னைக்குள் குடிசைகளோ, மீனவர்களின் கட்டுமரங்களோ, சென்னை கடற்கரையில் பலூன், சோளக்கதிர், பஞ்சுமிட்டாய், பட்டாணிக் கடைகளோ இருக்கக் கூடாது; வெளியேறுங்கள் எனக் கட்டளை இட்டுள்ளது, உலக வங்கி. அதனை ஆட்சியாளர்கள் விசுவாசமாக நிறைவேற்றக் கிளம்பி விட்டனர். இதன்படி, சென்னையின் குடிசை மக்களில் 75 ஆயிரம் பேரை செம்மண்சேரிக்கு அப்பால் குடியேற்றப் போகின்றனர். ஏற்கெனவே அடையாறு நதிக்கரை ஓரக் குடியிருப்புக்களை புல்டோசர்களால் தரைமட்டமாக்கி 1500 குடும்பங்களை இடம் பெயரச் செய்தும் விட்டனர். 7300 பேருக்கு வெளியேற்ற நோட்டீசு வழங்கி விட்டனர். படிப்படியாக அனைத்து குடிசைவாசிகளையும் துரத்தி விட்டு சென்னையை அழகுபடுத்தப் போகிறார்களாம்.


குடிசைகளை அகற்றச் சொல்லும் அரசால், அதே குடிசைகள் இருக்கும் இடங்களிலேயே காங்கிரீட்டு வீடுகளாகக் கட்டித்தர இயலாதா? அடையாறு பூங்கா எனும் ஊதாரித் திட்டத்துக்கு மட்டும் ரூபாய் 100 கோடி ஒதுக்க இயலுகிற அரசால் குடிசைகளை மேம்படுத்த இயலாதா?


திறந்தவெளியில் மலம் கழித்து நோயைப் பரப்புகிறதாய் குடிசை மக்கள் மீது குற்றம் சாட்டும் சென்னை மாநகராட்சி, ஏன் இதுவரை போதிய அளவில் கழிவறைகளைக் குடிசை மக்களுக்குக் கட்டித் தரவில்லை? பொதுக்கிணறு, குளங்களை தலித்துகளுக்கு மறுத்து விட்டு, தலித்களை சுத்தமற்றவர்கள் எனக் கூறும் பார்ப்பனீய வஞ்சகத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?


···


உலக வங்கியின் ஆசிபெற்ற சென்னைப் பெருநகரத் திட்டம் இத்துடன் நின்று விடவில்லை. நகரின் முக்கியமான சாலைகளில் சுவரொட்டிகள் ஒட்ட ஏற்கெனவே தடை செய்துவிட்டது. ஆர்ப்பாட்டம், ஊர்வலங்களை ஊருக்கு ஒதுக்குப்புறங்களுக்கு நகர்த்தி விட்டது. வள்ளுவர் கோட்டம் அருகே இனிமேல் எந்தவித அரசியல் நிகழ்ச்சியும்நடத்தப்படக் கூடாது என்று அறிவித்தும் விட்டது.


அடுத்து, தில்லியைப் போன்றே கையேந்தி உணவகங்களைத் துரத்தும் சதியை மெல்ல ஆரம்பித்துள்ளது. சென்னை மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் போன்று ""உணவகங்களில் கட்டாயமாக வெந்நீர் தரப்பட வேண்டும்'' எனும் சுகாதாரச் சுற்றறிக்கை, நடைபாதை உணவகங்களை அச்சுறுத்தித் துரத்தும் ஆயுதம்தான்.


சென்னையின் மொத்த பரப்பளவில் 3 முதல் 4 சதம் மட்டுமே சாலைகளாக உள்ளன என்றும் இதனை லண்டன், நியூயார்க் நகரங்களைப் போன்று 20% வரை அதிகரிக்க வேண்டும் என்றும் உலகவங்கி அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். சென்னையை பிற நகரங்களுடன் இணைக்கும் சாலைகள் அகலப்படுத்தப்படுகின்றன. திருச்சி சாலையில் செங்கல்பட்டு வரைக்கும், கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரைக்கும் நகரம் விரிந்து கொண்டே செல்கிறது. அச்சாலையின் இருபுறங்களிலும் பெட்டிக்கடைகள், காலைமாலை உணவகங்கள், தேநீர்க் கடைகள் இருந்த சுவடே இன்றைக்கு இல்லை. புல்டோசர்களின் கோரைப் பற்களால் பல பழைய கட்டிடங்கள் காங்கிரீட் கசடுகளாக்கப்பட்டு அகற்றப்படுகின்றன.


பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டிய 500 மீட்டர் வரை இருபுறமும் தகவல் தொழில்நுட்பப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொட்டிவாக்கத்தில் இருந்து செம்மண்சேரி வரை சாலையின் கிழக்கே உள்ள அனைத்து சிற்×ர்களும் அழிக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட உள்ளன. இந்த சாலையும் உலக வங்கி நிதியால் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்திரா நகர், காந்திநகர் ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் அன்றாடக் கூலிகள், பழைய மகாபலிபுரம் சாலையைக் கடந்து வேலைக்குப் போக முடியாமல், உலக வங்கிச் சாலையின் டிவைடர்கள் (சாலைகளின் நடுவே உள்ள தடுப்புச் சுவர்) தடுக்கின்றன.


சாலையை அகலப்படுத்துவது என்ற பெயரில் இடிக்கப்பட்டுப் போர்க்களமாகி நிற்கும் வீடுகள், கடைகள்; கையில் தங்கக் காப்பு, கஞ்சி போட்ட வெள்ளைக் கதர், டாட்டா சுமோ என்பவற்றைத் தங்கள் அடையாளமாக்கிக் கொண்டிருக்கும் நிலத்தரகர்கள்; அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி எனப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவகம் செய்யும் கணினி நிறுவனங்கள், ஓய்விடக் கடற்கரை இல்லங்கள் — என சென்னையின் அடையாளமே மாற்றப்பட்டு வருகின்றது.


எந்த ஒரு புதிய கட்டுமானத்தையும் மேற்கொள்வதில்லை எனக் கொள்கை முடிவெடுத்திருந்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமோ, பழைய மகாபலிபுரம் சாலையில் கணினி மென்பொருள் விற்பன்னர்கள் சொகுசாய் வாழ, அவர்களுக்கு வீட்டு மனைகளை உருவாக்க முடிவெடுத்து சோழங்கநல்லூர் கிராமத்தில் 500 குடும்பங்களைத் துரத்தி அடிக்க உள்ளது. அடுத்த வருடம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கென்று இதே ஊரில் பொதுத்துறையும் தனியார் துறையும் இணைந்து 25 லட்சம் சதுர அடியில் "அறிவுத் தொழில் நகரை' உருவாக்க உள்ளன.


சென்னை நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி அதனை பன்னாட்டு நிறுவனங்களின் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கும் திட்டத்தை உலக வங்கி 1970களிலேயே தொடங்கி விட்டது. மாஸ்டர் பிளானை உலக வங்கி உருவாக்கி, அது கடனாக வழங்கி இருக்கும் தொகை மட்டும் ரூபாய் 25 ஆயிரம் கோடிகள்.


நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கம் எனக் கூறிக் கொண்டு, 1976இலேயே உலக வங்கியின் ஆலோசனையை ஏற்று, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவ்வங்கியின் நிதி உதவியோடு தொடங்கி 2000 வாக்கில் நிறைவேற்றிய திட்டம்தான் கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும், காய்கனி அங்காடியும். அவர்களின் ஆலோசனையின்பேரில்தான், சாத்தாங்காடு இரும்பு வணிக வளாகமும், மாதவரம் சரக்குந்து நிலையமும் கட்டப்பட்டன.


மாஸ்டர் பிளான் திட்டத்தின்படி, பெருகி வரும் வெளிநாட்டுச் சுரண்டலுக்கு அத்தியாவசியமாகிப் போன விமானப் பயணங்களை விரிவாக்கும் நோக்கில், புதியதோர் விமான தளத்திற்கென்று மீனம்பாக்கத்துக்கு வடமேற்கே மணப்பாக்கம், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 1460 ஏக்கர் நிலத்தை வாங்க தமிழக அரசு 200506 பட்ஜெட்டிலேயே ரூ.100 கோடியை ஒதுக்கி உள்ளது.


சுமார் 25,000 கோடி முதலீட்டில் 2005இல் தொடங்கப்பட்டுள்ள "ஜவஹர்லால் நேரு தேசிய நகர மறு சீரமைப்பு திட்டம்' எனும் ஏழாண்டுத் திட்டம், சென்னைப் பெருநகரை நகர்மயமாக்கல் பகுதியாகவும் நகர்மயமாகாத பகுதி என்றும் பிரித்து, மைய நகரில் அனுமதிக்கப்படாத தொழில்களாக கால்நடை வளர்ப்பையும், நெல், மாவு அரைத்தல் போன்ற பல சிறு தொழில்களையும் வகைப்படுத்தி உள்ளது. இதன் மூலம் நூற்றாண்டு காலமாய் பல்வேறு சிறு தொழில்கள் மூலம் பிழைத்து வந்தவர்களின் குடும்பங்களை நகர விரிவாக்கம் தூக்கி வீசப் போகின்றது.


இவ்வளவையும் செய்து நகரில் வாழத் தகுதியானவர்களைக் குடியேற்றி விட்டால் மட்டும் போதுமா? தகுதியான வர்க்கம் பொழுது போக்க வேண்டாமா? அதற்கென்று "சென்னைப் பெருநகரில் பாரம்பரியம் மற்றும் பொழுது போக்கு மேம்பாட்டுக்காக' 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைச் செம்மையாக செலவு செய்ய கனிமொழி, கஸ்பார் மூலம் "சங்கமம்' ஆக்கி உள்ளார்கள்.


சென்னையை ஒட்டியுள்ள சதுப்புநிலப் பகுதி பள்ளிக்கரணை சதுப்பாகும். வெளிநாட்டுப் பறவைகள் முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும் இப்பகுதியினை அழியாது காக்கும்படி ""நீரி'' (Nஉஉகீஐ) எனும் இந்திய அரசு நிறுவனம் பரிந்துரைத்திருக்கிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமோ, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து கே.பி.என் எனும் பொறியியல் நிறுவனத்தை அழைத்து வந்து மாற்றுத் திட்டத்தை வகுத்து, அத்திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கி விட்டது. அத்திட்டப்படி இச்சதுப்பு நிலம், கட்டிட இடிமானக் கழிவுகளால் நிரப்பப்பட்டு அப்பகுதி பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டன. இன்று டாட்டா கன்சல்டன்சியும், விப்ரோவும் மாபெரும் கட்டிடங்களை அங்கு உருவாக்கியுள்ளன.


இந்த விரிவாக்கம் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு, ஒவ்வொன்றிலுமே உலக வங்கியின் நிதி மூலதனமிடப்பட்டு கிட்டத்தட்ட சென்னைப் பட்டணமே அடிமையாக்கப்பட்டு விட்டது. இத்திட்டங்களை மேற்பார்வையிடுவதற்கென்றே தனியாய் ஓர் அலுவலகத்தை உலக வங்கி சென்னை தரமணியில் அமைத்துள்ளது.


அழிக்கப்பட்டு வரும் விவசாயத்திலிருந்தும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களாலும் சொந்த மண்ணில் இருந்து வேர் பிடுங்கப்பட்ட மக்களை, எந்த வேலையாவது செய்து பிழைக்கலாம் என்று சென்னை நோக்கித் துரத்துகின்றது வாழ்க்கை. ஆனால் சென்னையிலோ, குடியிருக்க ஒண்டக் கூட முடியாமல் புறநகருக்குத் துரத்தப் போகிறது உலக வங்கியின் விரிவாக்கத் திட்டம்.
·கவி